Tamilnadu

வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல் : தென்கோடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை எச்சரிக்கை!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, குமரி, தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்தக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனேயே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸும் பதிவாகும்.

வங்கக்கடலில் புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வருகிற மே 15ம் தேதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக்கடலில் மையம் கொள்ளும். அதனைத் தொடர்ந்து 16ம் தேதி வாக்கில் புயலாக மாறக்கூடும்.

ஆகவே, மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளில் 15ம் தேதி 45-55 கி.மீ வேகத்திலும், 16ம் தேதி 55-65 கி.மீ வேகத்தில் 17ம் தேதியும் 55-65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.