Tamilnadu
தாயைக் காண 120 கி.மீ சைக்கிளில் பயணித்த பாசக்கார மகன்.. அன்னையர் தினத்தன்று சிவகங்கையில் நெகிழ்ச்சி!
கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், சொந்தபந்தங்களை பிரிந்து மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். பொது போக்குவரத்துகள் ஏதும் இல்லாத காரணத்தால் பலர் நடந்து சென்றும், சிலர் பைக்கிலும், சைக்கிளிலும் பயணித்தும் தங்களது பெற்றோர், மனைவி, மக்கள் என கண்டு மனதை தேற்றிக் கொள்கின்றனர்.
இருப்பினும் சமயங்களில் எதிர்பாராத விதமாக துயரச் சம்பவங்களும் இது போன்ற நிகழ்வுகளில் நடந்தேறி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் வேளையில் தனது தாயை காண்பதற்காக திருச்சியில் இருந்து சிவகங்கையில் உள்ள கிராமத்துக்கு கால்கடுக்க சைக்கிளில் பயணித்திருக்கிறார் பாசக்கார மகன்.
காரைக்குடி அருகே எஸ்.ஆர். பட்டணத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கருப்பையா என்பவர் அங்குள்ள அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவருடைய தாய் வள்ளியம்மாள் (70). பணி நிமித்தமாக திருச்சியில் தனது மனைவி, மகள், மகன் மற்றும் தாயுடன் குடிபெயர்ந்திருக்கிறார் கருப்பையா. அதில், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, தனது தாயாருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது.
திருச்சியில் உள்ள வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ள வசதியில்லாததால் காரைக்குடிக்கே திரும்பிய கருப்பையா மனைவியையும் குழந்தைகளையும் திருச்சியிலேயே தங்க வைத்துள்ளார். தினந்தோறும் தனது தாயாருக்கு வேண்டிய பணிவிடைகளையும் செய்துவிட்டு வேலைக்குச் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், வாரத்திற்கு ஒரு முறை திருச்சிக்கும் சென்று வருவார்.
தற்போது ஊரடங்கு காரணமாக பிள்ளைகளையும் மனைவியையும் காண திருச்சிக்கு சென்ற அவர், போக்குவரத்து இல்லாததால் தாயை கவனித்துக் கொள்ள முடியாமல் தவித்து போயிருக்கிறார். காரைக்குடியில் உள்ள பக்கத்து வீட்டாரும் கவனிப்பாரின்றி உள்ள வள்ளியம்மாளின் நிலை குறித்து கூறியதும் மேலும் வேதனையில் ஆழ்ந்த கருப்பையா வேறு வழியில்லாமல் திருச்சியில் இருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள காரைக்குடி எஸ்.ஆர். பட்டனத்துக்கு சைக்கிளில் பயணித்திருக்கிறார்.
புதுக்கோட்டை அருகே நெருங்கிய போது சைக்கிளில் பழுது ஏற்பட்டதால் மனம் நொருங்கி போன கருப்பையா, சுமார் 6 கி.மீ நடந்தே சென்று பழுது நீக்கிவிட்டு வீட்டுச் சென்று சிறிதும் அயர்ச்சியின்றி தனது தாய்க்கு வேண்டிய பணிவிடையை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !