Tamilnadu

வாட் வரி உயர்வு : “மத்திய அரசுக்கு சளைத்தவர்கள் இல்லை என்கிறதா அ.தி.மு.க அரசு?” - திருமாவளவன் தாக்கு!

கொரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பின் காரணமாக மக்களெல்லாம் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் சூழலில், தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீதான 'வாட்' வரியை உயர்த்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதனால் அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, திணறிக் கொண்டிருக்கும் மக்கள் மீது இப்படி வரிச்சுமையை ஏற்றுவதைக் கைவிடவேண்டும்; பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை அதற்கேற்ப குறைத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு விலைக் குறைப்பைச் செய்யவில்லை. இந்நிலையில், தமிழக அரசு 'வாட்' வரியை உயர்த்தியிருப்பதால், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ 3.25 , டீசல் ஒரு லிட்டருக்கு ரூ 2.50 என விலை உயர்ந்திருக்கிறது. இதனால் காய்கறி விலை முதல் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இது அநீதியிலும் அநீதியாகும்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் விமானங்களுக்கான பெட்ரோல் விலையைத் தொடர்ந்து மத்திய அரசு குறைத்து வருகிறது. முன்பு இருந்த விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில் இப்போது விமானங்களுக்கான பெட் ரோல் விற்கப்படுகிறது. இப்படி விலை குறைக்கப்பட்டதால் விமானங்களுக்கான பெட்ரோல் இப்போது ஒரு லிட்டர் 22.54 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆனால், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் ஒரு லிட்டர் 75.54 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தனியார் விமான கம்பெனிகள் லாபம் ஈட்ட உதவுகிற மத்திய அரசு, சாதாரண ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் விதமாக பெட்ரோல் மீது வரி விதித்துச் சுரண்டுகிறது. மக்களை வஞ்சிப்பதில் மத்திய அரசுக்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்று சொல்வதைப்போல தமிழ்நாடு அரசு வாட் வரியை உயர்த்தியிருப்பது ஆட்சியாளர்களின் மக்கள் விரோத மனப்பாங்கையே காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு பெட்ரோல் , டீசல் விலை உயர்வைக் கைவிடாவிட்டால் பாதிக்கப்படும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தவிர்க்க இயலாததாக அமையும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Also Read: “பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி அதிகரிப்பு” - அரசின் நிதிச் சுமையை மக்கள் மீது திணிக்கும் எடப்பாடி..!