Tamilnadu

மே 17 வரை ஊரடங்கு : “எவையெல்லாம் இயங்கும்.. எதற்கெல்லாம் தடை?” - தமிழக அரசு அனுமதித்துள்ள தளர்வுகள்!

கொரோனா பரவல் காரணமாக மே 3ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த தேசிய ஊரடங்கை மத்திய அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் ஊரடங்கு நீட்டிப்புக்கு கட்டுப்பாடுகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு :

1) கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின் படியே ஊரடங்கு கடைபிடிக்கப்படும். எவ்வித தளர்வுகளும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்,

* அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகளுக்கு அனுமதி. கட்டுமானத் தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்திலேயே இருக்கும் பட்சத்தில் அப்பணிகளை தொடரலாம்.

* ஐ.டி. நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் (குறைந்தபட்சம் 20 நபர்கள்) செயல்பட அனுமதி. நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வரவேண்டும்.

* சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர்களின் ஆய்வுக்குப் பிறகு, சூழலுக்கேற்ப 25% ஊழியர்களுடன் (குறைந்தபட்சம் 20 நபர்கள்) ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்படலாம்.

* அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நேரம் காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்பட வேண்டும்.

* ஹோட்டல்களில் காலை 6 முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.

* சலூன், பியூட்டி பார்லர்கள் தவிர அனைத்து தனிக் கடைகள் காலை 11 முதல் மாலை 5 வரை செயல்படலாம். (எலெக்ட்ரிகல், மொபைல் போன், கணினி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடியகம், கட்டுமானப் பொருட்கள், ஹார்டுவேர், சிமெண்ட் போன்ற தனிக்கடைகளுக்கு அனுமதி)

* ப்ளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்பு தேவை உள்ளோருக்கான வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர்/ மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்ற பிறகு அனுமதிக்கப்படுவர்.

2) சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு (நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர) அளிக்கப்பட்டுள்ள அனுமதி விவரங்கள்

* 50% பணியாளர்களுடன் (குறைந்தபட்சம் 20 பேர்) ஜவுளி உட்பட அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி. 15,000க்கும் மேலான மக்கள்தொகை கொண்ட பேரூராட்சிகளில் மட்டும் ஆட்சியரின் ஆய்வுக்குப் பின் ஜவுளித்துறை நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கலாம்.

* 50% ஊழியர்களுடன் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி. நகரங்களில் உள்ள ஜவுளி உள்ளிட்ட தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதியில்லை.

* ஐ.டி. நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 நபர்களைக் கொண்டு இயங்கலாம்.

* கிராமப்புறங்களில் அனைத்து தனிக் கடைகளும் காலை 9 - மாலை 5 வரை இயங்கலாம். ஹோட்டல்களில் காலை 6 - இரவு 9 வரை பார்சல் மட்டும் வழங்க வேண்டும்.

* நகராட்சி, மாநகராட்சிகளில் வணிக வளாகங்கள் தவிர அனைத்து தனிக்கடைகளும் காலை 10 - மாலை 5 வரை இயங்கலாம்.

எவையெல்லாம் இயங்காது, தடை விதிப்பு விவரங்கள்:

* பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிலையங்கள்

* வழிபாட்டு தலங்கள், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்

* தியேட்டர், பார், டாஸ்மாக், ஜிம், கடற்கரை, உயிரியர் பூங்காக்கள், மியூசியம், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள்

* அனைத்து வகையான சமய, சமுதாயம் விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், கூட்டங்கள், ஊர்வலங்கள்

* விமானம், ரயில், பேருந்து, மெட்ரோ போன்ற பொது போக்குவரத்துகள் இயங்காது.

* டாக்சி, ஆட்டோ, ரிக்‌ஷா, மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை.

* திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை. இறுதி ஊர்வலங்கள் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது.

* பணியாளர்கள் விடுதிகள் தவிர தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் இயங்க தடை.

Also Read: நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மண்டல வாரியாக விதிமுறைகள் அறிவிப்பு! #Corona