Tamilnadu

பாதிப்பில் புதிய உச்சத்தைத் தொட்ட தமிழகம் - ஒரே நாளில் 203 பேருக்கு தொற்று உறுதி! #CoronaUpdates

சென்னையில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பாதிப்பு 200ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகரான சென்னை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நாளுக்கு நாள் வெகுவேகமாக அதிகரித்து வரும் தொற்றால் சென்னையில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 203 பேரில் சென்னையில் மட்டும் 176 பேருக்கு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 3,200 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று செங்கல்பட்டில் 8 பேர், திருவள்ளூரில் 6 பேர், மதுரையில் 3 பேர், காஞ்சிபுரத்தில் 2 பேர், தஞ்சாவூரில் 2 பேர், கடலூர், திண்டுக்கல், கரூர், அரியலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவர் என, இன்று மொத்தம் 203 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 1082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

Also Read: கொரோனா தொற்று தீவிரம் : ஊரடங்கை மீறினால் ரூ. 100 அபராதம்; 14 நாட்கள் தனிமை - மாநகராட்சி எச்சரிக்கை!