Tamilnadu
“ஜோதிகாவை நீங்கள் மிரட்டலாம்! ஆனால் உடுப்பி கோபாலகிருஷ்ணன்கள் உருவாவதை தடுக்கமுடியாது” : நீதிபதி சந்துரு
உடுப்பி கோபாலகிருஷ்ணன் என்பவர் பாட்டு கற்று தரும் ஆசிரியர். தீவிர கடவுள் நம்பிக்கையுள்ளவர். மிகவும் கஷ்ட ஜீவனமுள்ள குடும்பத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்கு குடியேறினார்.
தனது உழைப்பில் கிடைத்த பணத்தில் செங்கை மாவட்டத்தில் தனது சேமிப்பு பணத்தில் சகாய விலையில் நான்கு கிரவுண்ட் வீட்டுமனை நிலத்தை 80களில் வாங்கி வைத்திருந்தார். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் பத்து லட்சம்.
தனது வயதான காலத்தில் தனது மகளுடன் வசிக்க பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தார். அவர் எனது நெடுநாளைய நண்பர். என்மீது பேரன்பும், மரியாதையையும் வைத்திருப்பவர்.
ஒருநாள் அவர் என்னிடம் கேட்டார். "எனக்கு வயதாகிவிட்டது. எனவே இறுதிகாலத்தைப் பார்த்துக்கொள்ள போதுமான சேமிப்பு வைத்திருக்கிறேன்.
செங்கை மாவட்டத்திலுள்ள என்னுடைய காலிமனையை ஏதேனும் தர்ம காரியத்திற்கு கொடுக்க நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாக கோவில் (அ) சமயம் சார்ந்த பணிக்கல்ல! ஏழை மக்களின் கல்விக்குச் செலவிட நினைக்கிறேன். உங்களது அனுபவத்தில் அப்படி கல்விப்பணி மிகுந்த அமைப்பின் பெயரைக் கூறினால் அவர்களுக்கு தானமாக கொடுத்துவிடுவேன். எனது மனைவிக்கும் இதில் முழு சம்மதமே என்று கூறி அவர்களையும் என்னிடம் பேசவைத்தார்.
நான் உடனே "அகரம் அறக்கட்டளை" பற்றிக் கூறினேன். உடனே கோபாலகிருஷ்ணன் சம்மதித்தார். தானப்பத்திரம் தயாரானது. நான் முதல் சாட்சி கையெழுத்திட்டேன். கொரானா காலத்திலேயே ஊரடங்குக்கு முன்னதாக (13/03/2020) பத்திரம் பதிவிடப்பட்டது.
உடல்நிலை குன்றியிருந்தபோதும் பெங்களூரிலிருந்து ரயிலில் வந்து கையெழுத்திட்டார். மூலப் பத்திரங்களை அகரம் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
படப்பிடிப்பிலிருந்த தம்பி சூர்யா அலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார். அதில் விந்தையென்னவென்றால் இதுவரை உடுப்பி கோபாலகிருஷ்ணன் சூர்யாவை படத்தில் கூட பார்த்ததில்லை. அவர் கன்னடக்காரர்.
வசதி அதிகமில்லை சென்றாலும் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள மனையை கல்விப்பணிக்காக அளித்த கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதில் நமக்கு எவ்வளவு பெருமை.
நான் ஏன் இந்த நிகழ்வை இங்கு விரிவாகப் பதிகிறேன் என்றால் இன்று சில சக்திகள் ஜோதிகாவிற்கு கெதிராக முகநூலில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். மிரட்டவும் செய்கிறார்கள்.
அவர் என்ன அப்படி தப்பான கருத்தைக் கூறிவிட்டார்? கோயில் உண்டியலில் தானம் செய்வது போல் கல்விக்கும் தானமளிப்பீர் என்றுதானே?
உடுப்பி கோபாலகிருஷ்ணன் இறைபற்றாளர். அவர் ஜோதிகா சொன்னதை கேட்டவரில்லை. தானே முன்வந்து ‘சமய காரியங்களுக்கு வேண்டாம்; ஏழைகளின் கல்விக்கு கொடுங்கள்’ என்று கூறியதோடு அவர் சக்திக்கும் அப்பாற்பட்டு பத்து லட்சம் ரூபாய்க்கு தான் பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு பெங்களூருக்கு இரண்டாம் வகுப்பில் இரவு ரயில் ஏறினாரே!
இந்தியாவில் இதுபோன்ற கோபாலகிருஷ்ணன்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர். கல்விதான் உண்மையான இறைபணி என்று அவர்களுக்குத் தெரியும்!
ஜோதிகாவை நீங்கள் மிரட்டலாம்! ஆனால் உடுப்பி கோபாலகிருஷ்ணன்கள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். இது நிச்சயம்! இது சத்தியம்!!!
கட்டுரையாளர் : நீதியரசர் சந்துரு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!