Tamilnadu

சென்னையில் மேலும் 43 பேருக்கு கொரோனா... சமூகப் பரவல் நிலைக்குச் சென்றதா? - விஜயபாஸ்கர் மழுப்பல் பதில்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800ஐ கடந்தது. இன்று மட்டும் 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டதில் 835 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 7,707 பேருக்கு இன்று பரிசோதிக்கப்பட்டதில் 66 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் 38 பேரும், பெண்கள் 28 பேரும் உள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,821 ஆக உள்ளது. இன்றைய பாதிப்பு எண்ணிக்கையில் அதிகபட்சமாக சென்னையில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 41 ஆக உயர்ந்துள்ளது என்று கூறிய விஜயபாஸ்கர், இன்று மட்டும் 94 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடந்தவர்களின் விகிதம் 52.71% ஆக உள்ளது என்றார்.

உயிரிழப்பை பொறுத்தவரையில் சென்னையில் குன்றத்தூரைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் உயிரிழந்திருக்கிறார். அதனடிப்படையில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னையில் தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சமூகப் பரவல் நிலையை அடைந்துவிட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 1 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட நகரமாக இருப்பதால், சென்னையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது சவாலான செயலாக உள்ளது.

அதற்காகவே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கும் விதமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Also Read: “கொரோனா பரவலின் வீரியம் மே மாதத்தில் பயங்கரமாகும் - பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடக்கும்”: அதிர்ச்சி தகவல்!