Tamilnadu

“ஊருக்கு மட்டும் உபதேசம்... ஊரடங்கை மீறிய எடப்பாடி பழனிசாமி” - காவல்துறையில் புகார்! #CoronaLockdown

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் சென்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் ஊரடங்கு சட்டத்தையும், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறிய செயல் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் எழுந்துள்ளது.

கடந்த 15 ஆம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியது எடப்பாடியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளும் தனிநபர் இடைவெளியும் கடைபிடிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, காணொளிக் காட்சி மூலம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தான், இன்று சேலம் பயணித்து கூட்டம் நடத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நேற்று தலைமைச் செயலகத்தில் அமர்ந்து காணொளிக் காட்சி மாநாடு வழியாக மாவட்ட ஆட்சியர்களோடு கலந்தாலோசனை நடத்திய முதல்வர் அடுத்த நாளே சேலத்திற்கு வந்து அலுவலர்களை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தவேண்டிய அளவுக்கு என்ன அவசியம் ஏற்பட்டது எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளை கொண்டு கூட்டத்தை நடத்திய தமிழக முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பாரத்திபன் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.

144 சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறி உள்ள முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தி.மு.க தலைமையின் அனுமதியோடு நீதிமன்றத்திற்கும் செல்ல உள்ளதாக தி.மு.க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Also Read: பா.ஜ.க அரசு தமிழகத்தை வஞ்சிப்தை தட்டிக்கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லையா? - கே.எஸ்.அழகிரி விளாசல்!