Tamilnadu

"10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து ‘All Pass' என அறிவிக்கவேண்டும்” - அரசுக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சியளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாக உள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நமக்கு நாமே தனிமைப்படுத்தத் தவறிவிட்டால் சமூகப் பரவலைத் தடுக்கமுடியாது. பேரிடர் காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையானது ஆகும்.

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்காத நிலையில் 11-ம் வகுப்புக்கு கடைசித் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு கடைசித் தேர்வை 34 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. தேர்வு எழுதாதவர்களுக்கு மறு தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவும் மின்னல் வேகத்தில் பரவி உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்து உலகையே உறைய வைத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எதிர்கால மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும் மன உளைச்சலிலும் உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் 10-க்கு 10 அளவில் உள்ள வீடுகளில் வசித்து வருகிறார்கள். படிப்பதற்குப் போதிய வசதியின்றி தவிப்பதும் வெளியே வராத சூழலில் தேர்வு நடந்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.

எனவே 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திடவும் 11-ம் வகுப்பிற்குப் பள்ளி அளவில் தேர்ச்சி அளித்திடவும் ஆவன செய்ய வேண்டுகிறேன். மேலும் கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு மாணவர்கள் தங்களின் மேற்படிப்பில் பாடப்பிரிவினைத் தேர்வு செய்வதற்கு ஏதுவாக அரசே ஒரு சிறப்புத் தேர்வு வைத்து தேர்வுசெய்து 11-ம் வகுப்பில் இடமளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: “அரசின் நிதிநிலைக்கும் கொரோனா வந்துவிட்டதா? ஏன் இந்த ஏற்பாடு?” - பா.ஜ.க அரசால் அல்லல்படும் மக்கள்!