Tamilnadu

"சென்னையில் 81 பேருக்கு கொரோனா தொற்று; 2ஆம் இடத்தில் திண்டுக்கல் மாவட்டம்” - சுகாதாரத்துறை தகவல்! #Corona

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 - ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 102 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2வது இடத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ். அப்போது அவர் தெரிவித்ததாவது :

“இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள். எஞ்சிய 2 பேரில் ஒருவர் அமெரிக்கா சென்று வந்தவர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்த 411 பேரில் 364 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். டெல்லியில் இருந்து வந்தவர்களில் இதுவரை 1200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள் யாருக்கும் அதிதீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில் இல்லை. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போதும் இரண்டாம் கட்டத்தில்தான் உள்ளது. சமூக பரவல் எனும் ஆபத்தான நிலைக்குச் செல்லவில்ல.

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 - ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு வளையங்கள் உருவாக்கி நோயை கட்டுப்படுத்தி வருகிறோம்.”

இவ்வாறு செய்தியாளர் சந்திப்பின்போது பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டோர் 411-ஆக அதிகரிப்பு” : அதிர்ச்சியில் தமிழக மக்கள்!