Tamilnadu

ஒரே வாரத்தில் கொரோனா வார்டில் அடுத்தடுத்து 5 மரணங்கள் - கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் என்ன நடக்கிறது?

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, தமிழக அரசு சார்பில், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 3,600 பேரைக் கண்டறிந்து அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டு வாசலில், அதற்கான அறிவிப்பு ஒட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரைத் தொடர்ந்து நேற்றைய தினம், கொரோனா அறிகுறியுடன் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஒரே நாளில் 40 வயதான நபர் உயிரிழந்தார்.

அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் சோதனை முடிவுகள் வெளிவரவில்லை.

இந்த இரண்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதே மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உட்பட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 66 வயதான மரியஜான் என்பவர் கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த வாரம் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலம் துறைக்கு வந்துள்ளார்.

அவருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆய்வில் மரியஜானுக்கு கொரோனா தொற்று இல்லை என கூறப்பட்ட நிலையில் இன்று திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அதே வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முட்டம் பகுதியைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையும், திருவட்டார் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை சார்பில் கூறப்பட்டபோது மரியஜானுக்கு சிறுநீரக பிரச்னையும், இரண்டு வயது குழந்தைக்கு பிறவி எலும்புநோய் இருந்ததாகவும் 24 வயது இளைஞருக்கு நிமோனியா பிரச்னையால் ரத்தத்தில் தொற்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்களது ரத்த மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவுகள் வந்ததும் முழு தகவல் தெரிவிப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனை கூறும் காரணங்கள் அப்பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லையென்றும், முறையாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா என சந்தேகம் எழுவதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 5 பேர் பலியாகியுள்ளதால் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை விசாரண நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனனர்.

Also Read: கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் ஒரே நாளில் மரணம் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி!