Corona Virus

கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் ஒரே நாளில் மரணம் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஒரே நாளில் கன்னியாகுமரியை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழக அரசு சார்பில், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 3-ம் தேதி குவைத் நாட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் ஊர் திரும்பியதில் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வந்தார்.

கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் ஒரே நாளில் மரணம் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்பட்டதால் நேற்று கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் திடீரென்று இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுதொடர்பாக அம்மருத்துவனையின் தலைமை மருத்துவர் கூறுகையில், “அவருக்கு முன்பே கல்லீரல் மற்றும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது; அதன் பிறகு கொரோனா அறிகுறி வேறு. அவரின் ரத்த மாதிரிகளின் சோதனை முடிவு வந்தால்தான் அவர் எதனால் உயிரிழந்தார் எனத் தெரியும்” என தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories