Tamilnadu
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல் : அனைவருக்கும் பரிந்துரைக்கும் மருத்துவர்கள்! #Corona
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அனைத்து வயதினரையும் பாதித்து வந்தாலும், பெரும்பாலும் வயோதிகத்தை எட்டியவர்களையே உலுக்கி எடுத்து வருகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியில்லாதவர்களே இந்த கொரோனாவால் அதீத விளைவுகளைச் சந்தித்து உயிரிழக்க நேரிடுகிறது.
தற்போது இந்தியாவிலும் இந்த கொரோனாவின் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 938 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 84 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல தமிழகத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியான நிலையில், 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நோயாளிகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக அவர்களுக்கென சுகாதாரத்துறை சார்பில் பிரத்யேகமாக உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வகையில் சத்தான உணவுகள் கொடுக்கப்படுகிறது என சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள அவர், கொரோனா நோயாளிகளுக்காக ஊட்டச்சத்து நிபுணர்களின் மேற்பார்வையின் அடிப்படையில் 20 பேர் கொண்ட குழுவினர் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 5 வேளை எனப் பிரித்து சத்துள்ள உணவுகள், பழச்சாறுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, “அதிகாலை வெறும் வயிற்றில், இஞ்சி மற்றும் தோல் நீக்கப்படாத எலுமிச்சை பழத்தை கொதிக்க வைத்த நீராகாரம் வழங்கப்படும்.
காலை சிற்றுண்டியாக இட்லி, வெங்காய சட்னி, சம்பா கோதுமை உப்புமா, சாம்பார் இரண்டு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பால் கொடுக்கப்படுகிறது. இந்த சிற்றுண்டி ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு ரொட்டி-சப்பாத்தி வழங்கப்படுகிறது.
நண்பகல் நேரத்தில் இஞ்சி, லெமன் சேர்த்த சூடான நீரும், மிளகு உப்பு கலந்த வெள்ளரித் துண்டுகளும் கொடுக்கப்படுகிறது.
மதிய உணவாக சத்தான காய்கறிகள் கொண்ட உணவுகள் வழங்கப்படுகிறது. சப்பாத்தி, புதினா சாதம், சாம்பார் சாதம், கீரை, ரசம், தினசரி இருவகை காய்கறி பொறியலில் புடலங்காய், பீன்ஸ், கேரட் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
மாலையில் மிளகுத்தூள் சேர்த்த பருப்பு சூப், கொண்டைக்கடலை சுண்டலும், இரவில் இட்லி, சப்பாத்தி, காய்கறி குருமா, ரவா உப்புமா, கிச்சடி, வெங்காயச் சட்னி கொடுக்கப்படுகிறது.
பின்னர் இரவு 11 மணியளவில் மிளகு மற்றும் மஞ்சள் போட்டு கொதிக்க வைத்த நீர் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவல்ல உணவு வகைகள் வழங்கப்படுகிறது” என்கிறார் மருத்துவர் ஜெயந்தி.
தற்போது ஊரடங்கில் வீட்டில் முடங்கிக் இருக்கும் மக்களும் இதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவல்ல உணவு வகைகளை நன்கு வேக வைத்து உண்ணலாம் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், நேரத்திற்கு தூக்கம், முறையாக சுகாதாரத்தை கடைபிடித்தல் ஆகியவை கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கு வழிவகுக்கும். காய்கறி மற்றும் பழங்களை நன்கு கழுவிய பிறகே சமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!