Tamilnadu

திருப்பூரில் நிறுவனங்கள் மூடலால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள்-என்ன செய்கிறது அரசு?

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 15 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இதனால் தமிழகத்தில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 31 வரை திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட உள்ள நிலையில், லட்சக்கணக்கான வட மாநில ஊழியர்கள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.

மாநிலங்களில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஒருபக்கம் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தினக்கூலியை நம்பியே இருக்கின்றனர்.

மோடி அரசின் ஜி.எஸ்.டி உள்ளிட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளால் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் உற்பத்தி பாதிக்கப்படும் வேளையில், வட மாநில ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு அவர்களுக்கான வாழ்வாதார பாதிப்பை எப்படி சரி செய்யப்போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அம்மாநில அரசுகள், ரேசன்கார்டுதாரர்களுக்கு நிவாரண உதவி அளித்து வருகின்றன. தமிழகத்தில் அதுபோன்ற எந்த அறிவிப்பையும் எடப்பாடி அரசு வெளியிடவில்லை.

ஆனாலும், ரேசன் கார்டு இல்லாத வடமாநிலத் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியே. தமிழகத்தில் அதிகமாக உள்ள அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க என்ன செய்யப்போகிறது எடப்பாடி அரசு?

Also Read: Corona Alert : தமிழகம் முழுவதும் 144 தடை : அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவு - கடைகள் இயங்குமா?