Tamilnadu

கொரோனா அச்சுறுத்தலால் தவித்து வரும் மக்களை மேலும் கலங்கவைத்த மின் வாரியத்தின் அறிவிப்பு!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகள் பலவற்றில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் இந்தியாவில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மக்கள் வெளியில் வர முடியாத நிலை நீடிப்பதால் வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்து முறை செலுத்திய மின் கட்டணத்தையே இந்த மாதத்திற்கும் செலுத்தும்படி தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஊழியர்கள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர். எனவே, இம்மாதம் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், முந்தைய கட்டணத்தையே செலுத்துமாறு, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மின் வாரியம், விடுத்த அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச் மாத பட்டியலுக்கு, 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை, 'மீட்டர் ரீடிங்' எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஜனவரி, பிப்., மாத கணக்கீட்டின்படி, பணம் செலுத்த கோரப்படுகிறது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும்.

மின் கட்டண மையங்களுக்கு வருவதைத் தவிர்த்து, ஏற்கனவே அறிவித்தபடி, இணையதளம், மொபைல் செயலி போன்ற, 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணத்தை செலுத்தலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைத்து வந்த நிலையில், பழைய கட்டணத்தையே செலுத்த அறிவுறுத்தியிருப்பது மக்களை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த இயலாதாவர்கள் மின் வாரிய அலுவலகத்தையோ, தனியார் கட்டணம் செலுத்தும் மையங்களையோ நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு குறைந்த நிதியையே ஒதுக்கியிருப்பதாகவும், பாதுகாப்பு பணிகளில் திட்டமிடல் இல்லை எனவும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு.

Also Read: "கிராமப்பகுதிகளில் கொரோனா பரவாதா?” - கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த டாக்டர் பவித்ரா விளக்கம்!