Tamilnadu
கணவனின் குடியால் மனைவி தற்கொலை - கடிதம் எழுதிவைத்து உயிரை விட்ட கணவன் : குடியைக் கெடுத்த குடி!
பண்ருட்டி அருகே திருமணமான 8 மாதங்களில் தம்பதியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கணவர் எழுதிய உருக்கமான கடிதம் போலிஸிடம் சிக்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகையைச் சேர்ந்த மணிகண்டன், மகேஸ்வரி ஆகிய இருவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு இருவரும் தனிக்குடித்தனம் சென்றனர்.
மகேஸ்வரி 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மணிகண்டன் குடிக்கு அடிமையானதாகத் தெரிகிறது. இதனால் தினமும் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் தம்பதியர் இருவருக்கும் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
சில நாட்களாக மணிகண்டன் தான் பார்த்துவந்த சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், கணவர் மணிகண்டன் வெளியே சென்றிருந்த நேரத்தில் மனமுடைந்த மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போதையில் வீட்டுக்கு வந்து படுத்து தூங்கிய மணிகண்டனுக்கு காலையில் எழுந்ததும் தான் விபரீதம் புரிந்தது.
பின்னர் மனைவியின் சடலத்தை இறக்கிவிட்டு அதே துப்பட்டாவால் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மணிகண்டனின் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் வீட்டுக்குள் சென்று பார்த்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மணிகண்டன் இறப்பதற்கு முன்பு எழுதிவைத்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், “எனது குடிபழக்கத்தால் மனைவியையும், அவரது வயிற்றில் வளர்ந்த சிசுவையும் பறிகொடுத்து விட்டேன். என் மனைவி இல்லாத இந்த உலகத்தில் நானும் வாழமுடியாது. என் மனைவி சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். அம்மா, என்னை மன்னித்து விடுங்கள். மாமா, எனது அம்மாவை கவனித்துக்கொள்ளுங்கள்” என எழுதியுள்ளார்.
இந்த தற்கொலை குறித்து பண்ருட்டி போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் திருவதிகை பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!