Tamilnadu

“சக்தி இருந்தால், வெற்றிடம் எனச் சொல்பவரே அதை நிரப்பட்டும்” - ரஜினி பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மக்களுக்காக சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் பேசிவருகின்றனர்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சிறப்பு வாய்ந்த கொல்லிமலையில் மகளிர் விடுதி மட்டும் இல்லாமல் தமிழக அரசு தங்கும் விடுதிகள் அமைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

நேரமில்லா நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், அரசுதான் தற்போது வதந்திகளை பரப்புகிறது என்று குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், “தொலைபேசியை எடுத்தால் மக்கள் பீதியடையும் வகையில் இருமி, கொரோனா தொடர்பாக இதைச் செய்யாதீர்கள் அதைச் செய்யாதீர்கள் என பயமுறுத்துகிறார்கள், ஏ.சி-யில் உட்காராதீர்கள் என்றும் மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளைக் கழுவ வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

ஏ.சி-யில் உட்காரக் கூடாது என்றால் சட்டசபையில் உள்ள நமக்கே பாதுகாப்பு இல்லை. இத்தாலியில் போப் ஆண்டவர் பேசும்போது ஒருவர் கூட இல்லை. சீன அதிபர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. வாஷிங்டனில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

தமிழகத்தில் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று தெரிவித்தபடியே மக்களை பயமுறுத்துகிறார்கள். சட்டமன்றத்தில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை.” என்றார்.

பின்னர், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார் துரைமுருகன். அப்போது, தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி கூறியது குறித்துக் கேட்டதற்கு, “சக்தி இருந்தால் அவர் வெற்றிடத்தை நிரப்பட்டும்” எனப் பதிலளித்தார்.

Also Read: “நாங்கள் நீட் தேர்வை என்றைக்கும் எதிர்ப்போம்; உங்கள் நிலை என்ன?” - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!