Tamilnadu
"மீண்டும் தலைதூக்கியிருக்கும் பெண் சிசுக் கொலை இதயத்தைப் பதறச் செய்கிறது” - மு.க.ஸ்டாலின் வேதனை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகன் - சௌமியா தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் குழந்தை இறந்துவிட்டதாக கூறி புதைத்துள்ளனர்.
இது அக்கம்பக்கம் வசிப்பவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உசிலம்பட்டி டி.எஸ்.பி ராஜா தாசில்தார் செந்தாமரை மற்றும் போலிசார் விசாரணை நடத்தினர்.
குழந்தையைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு காவல்துறைக்கு கிடைத்த மருத்துவ அறிக்கையில் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
வறுமையின் காரணமாக பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்துக் கொன்றதாக பெற்றோர் வாக்குமூலம் அளித்தனர். அதையடுத்து பெற்றோர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பலபத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் பெரும் கொடுமைகளில் ஒன்றாக நிகழ்ந்து வந்த பெண் சிசுக் கொலை மீண்டும் தலைதூக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.
கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்டோர், துணை நின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, உசிலம்பட்டி அருகே பெண் சிசுக் கொலை எனத் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில்,பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!