Tamilnadu

வாழ வழியில்லை; கருணைக்கொலை செய்ய அனுமதியுங்கள் - கலெக்டரிடம் முதிய பெற்றோர் மனு!

திருப்பூர் மாவட்டம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன் (85), கருணையம்மாள் (65) ஆகிய இருவருக்கும் பழனிசாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டதால் சென்னியப்பனும், கருணையம்மாளும் மகனுடன் வசித்து வருகிறார்கள்

மகன் பழனிசாமி அவரது மனைவியுடன் சேர்ந்து தங்களது சொத்துகளை ஏமாற்றி வாங்கிக் கொண்டதோடு தங்கள் இருவரையும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருணையம்மாள் மனு கொடுத்திருக்கிறார்.

அந்த மனுவில், “எங்கள் மகன் பழனிசாமி, என் கணவர் பெயரில் இருந்த அனைத்து சொத்துகளையும் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டு 10 ஆண்டுகாலமாக கொடுமைப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக ஏற்கெனவே பல்லடம் போலிஸாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். அதற்கும் விடை கிடைக்கவில்லை. இதனால், மின் இணைப்பை துண்டித்தும், தண்ணீருக்கும் வழியில்லாமல் செய்துவிட்டனர். ஆகையால் நாங்கள் இருவரும் தற்போது வாழவே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

எனவே எங்களுக்கு உரிய நீதியை பெற்றுக்கொடுங்கள். இல்லையேல் கருணைக்கொலை செய்ய அனுமதியுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகன், மருமகனின் கொடுமையால் தவித்து வரும் வயதான பெற்றோர் கருணைக் கொலை செய்யக்கோரி மனு கொடுத்துள்ளது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.