Tamilnadu

தொடர் கொள்ளையர்களை சிக்கவைக்க உதவிய அமெரிக்கப் பெண் : அடையாறு கொள்ளை வழக்கில் நடந்தது என்ன?

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலர் குடியிருப்பில் புலனாய்வு அலுவலகத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றுபவர் பாரதி. இவரது பெற்றோர் ராமச்சந்திரன் மற்றும் சரோஜா பெசன்ட் நகர் 5வது அவென்யூவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி ராமச்சந்திரன் மற்றும் சரோஜா இருவரும் திருச்சி செல்வதற்காக ஆட்டோ மூலம் எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது அவர்களை சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

பின்னர் அடுத்த நாள் காலை அவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாக அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் சரோஜாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மகள் பாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாரதி மற்றும் அவரது கணவர் இருவரும் பெற்றோர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர கம்மல், 40 சவரன் நகை, 2 கைக்கடிகாரங்கள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக பாரதி சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலிஸார் இதில் தொடர்புடைவர்களைப் பிடிப்பதில் சிரமம் அடைந்துள்ளனர். ஆனால், வேறொரு கொள்ளை வழக்கில் இந்தக் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

நீலாங்கரை பகுதியில் அமெரிக்க தம்பதிகளான ஹெரால்ட் மற்றும் அவரது மனைவி டயானா வசித்து வருகின்றனர். இவர்கள் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு கொள்ளையர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர்.

ஆனால் வீட்டின் தரைதளத்தில் டயானா கொள்ளையர்கள் வருவதைக் கண்டுபிடித்துள்ளார். அப்போது முதல் தளத்தில் டயானா கொள்ளையர்கள் தன்னையும் தாக்க வருவதை அறிந்து சாதுரியமாக அறை ஒன்றுக்குள் சென்று பூட்டிக் கொண்டுள்ளார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு புகார் செய்துள்ளார். வழக்கமாக அமெரிக்காவில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றாலோ, உதவி தேவைப்பட்டாலோ 911 என்ற உதவி மையத்திற்கு அழைப்பதுபோல் காவல்துறையையும் தொடர்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து அருகிலுள்ள காவலர்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலிஸார் வந்துள்ளனர். போலிஸ் வாகனத்தின் சத்தம் கேட்டு கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முடியாமல் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது டயானாவின் கணவர் கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்தார்.

இது அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. அது கொள்ளையர்களைப் பிடிக்க போலிஸாருக்கு உதவியாக இருந்தது. குறிப்பாக அடையாறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்த்தியவர்கள் இந்தக் கொள்ளையர்கள் என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர்.

Also Read: “அரசு நிலத்தையே OLX-ல் விற்க முயற்சி” : அதிர்ந்துபோன இந்து அறநிலையத்துறை! #CyberCrime

இதனையடுத்து சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து காவல்துறையினர் விருதுநகரைச் சேர்ந்த வாணிகருப்பு மற்றும் மதுரையைச் சேர்ந்த சுரேந்தர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சிவகங்கையை சேர்ந்த சுகுமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வாணிகருப்பு மற்றும் சுரேந்தர் ஆகியோரிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீது ஏற்கனவே சாஸ்திரிநகர் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.

Also Read: 3 பேர் 100 பைக்குகள் - போலிசுக்கு தண்ணி காட்டிய திருட்டு கும்பல் சென்னையில் சிக்கியது!