Tamilnadu

"எடப்பாடி பழனிசாமி செய்தது விவசாயிகளை ஏமாற்றும் பித்தலாட்ட நடவடிக்கை" - முகிலன் குற்றச்சாட்டு!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் என்பது விவசாயிகளை ஏமாற்றும் பம்மாத்து நடவடிக்கை என சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் கரூர் மாவட்டத்தை இணைக்கக் கோரி, மணல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரி, மத்திய அரசால் ஹைட்ரோகார்பன் கிணறுகள் என கொள்கை முடிவெடுத்து அறிவித்த 1,201 கிணறுகளை தடை செய்யக் கோரி உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூழலியல் போராளி முகிலன், “சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் காவிரிப் பாசனம் பெறும் கரூர் மாவட்டத்தையும் 5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் திருச்சி மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இணைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து பின்னர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் இணைக்கப்படவில்லை.

விவசாய மண்டல பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துடன் இணைத்தால் மட்டுமே தமிழக உணவு மண்டலம் பாதுகாக்கப்படும். மேலும் காவிரியாற்றில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு தடை விதித்தால் மட்டுமே தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய முடியும்.

மேலும், நடைமுறையில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 1200க்கும் மேற்பட்ட கிணறுகளை மூடாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெற்று அறிக்கையே. இந்தப் பாதுகாக்கப்பட்ட மண்டலத்திற்குள் இறால் பண்ணை, அனல்மின் நிலையம், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், ரியல் எஸ்டேட் என அனைத்தையும் அரசு தடை செய்ய வேண்டும்.

நாகை மாவட்டத்தில் 12 அனல் மின் நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்படி அனல்மின்நிலையம் அமையும் பட்சத்தில் அந்தப் பகுதி எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறும்?

தரைப்பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் பன்னாட்டு நிறுவனங்கள் பெட்ரோலியக் கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு முழு இறையாண்மையோடு சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எரிவாயு குழாய்கள் அகற்றப்படாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது விவசாயிகளையும் மக்களையும் ஏமாற்றும் பித்தலாட்ட நடவடிக்கை” எனக் குற்றம்சாட்டினார்.

Also Read: டெல்டா மக்களின் பாராட்டுக்கு உரியவரா எடப்பாடி பழனிசாமி? - விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க அரசு!