உணர்வோசை

டெல்டா மக்களின் பாராட்டுக்கு உரியவரா எடப்பாடி பழனிசாமி? - விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க அரசு!

டெல்டா விவசாயிகளின் பாராட்டுக்கு உரியவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.

டெல்டா மக்களின் பாராட்டுக்கு உரியவரா எடப்பாடி பழனிசாமி? - விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவிரிப் படுகையில் வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்பதை அறிவித்ததற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் 7ஆம் தேதி திருவாரூரில் ஒரு விவசாயிகள் சங்கத்தின் பெயரில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. வேளாண் மண்டலத்துக்காகப் போராட்டம் நடத்தியவர்களில் சிலரே பாராட்டும் அளவுக்கு, எடப்பாடியின் அறிவிப்பானது இன்ப அதிர்ச்சியை அளித்ததும் நிதர்சனம். கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்..?

சட்டமன்றத்திலே இதற்கான சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தபோது அரசாங்கத்தின் குட்டு அம்பலத்துக்கு வந்தது. காவிரிப்படுகையின் தொடக்கம் முதல் அதன் கடைமடைப் பகுதிவரை விவசாயிகளும் இயற்கைச்சூழல் காப்புச் செயற்பாட்டாளர்களும் சட்ட மூலத்தைப் பார்த்து திகைத்துப்போனார்கள்.

அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் இந்தச் சட்டமானது, எவ்வாறு வாய்ப்பந்தலுக்கானதாக மட்டும் இருக்கப்போகிறது என்பதை அக்கறையோடு சுட்டிக்காட்டின. அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், முதலமைச்சர் பழனிசாமிக்கு புது பட்டம் ஒன்றைச் சூட்டி மகிழ்வதில் அவரது தரப்பில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவருக்கான இந்தப் பாராட்டு உண்மையில் ஏன் உகந்ததாக, உரியதாக இல்லை என்பதற்கான காரணங்களை வரிசையாக அடுக்கமுடியும்.

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம்’ பொதுப்படையாக வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் உள்ளம்சங்கள் சட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானவை எனும் கருத்தும் வலுவாக எழுந்தது.

காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதியில் உள்ள நாகை, கடலூர் மாவட்டங்களைக் கடுமையாக பாதிக்கக்கூடிய 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பெட்ரோலிய மண்டல ஆணையை ரத்துசெய்யாமல், இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது கேலிக்கூத்தானது என்பதுதான் காரணம். பல தரப்பு அழுத்தங்களை அடுத்து அந்த ஆணையை மட்டும் ரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால், சட்டத்தின் மற்ற ஓட்டைகளுக்கும் காவிரிப் படுகை விவசாயிகளின் ஏமாற்றத்துக்கும் பழனிசாமி அரசு உரியபடி ஒரு வார்த்தைகூட பதிலளிக்கவில்லை.

டெல்டா மக்களின் பாராட்டுக்கு உரியவரா எடப்பாடி பழனிசாமி? - விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க அரசு!

முதல் விவகாரம், முதலமைச்சரின் அறிவிப்புக்கும் சட்டப்பேரவையில் அவருடைய பேச்சுக்கும் இடையேயான முரண்பாடான தன்மை ஆகும். இந்த ஒரு அம்சத்திலும் பல உள் பிரச்னைகள் இருக்கின்றன. சேலம் மாவட்டம் தலைவாசலில் முதலமைச்சர் முதலில் அறிவிப்பை வெளியிட்டபோது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஏழு மாவட்டங்கள் இடம்பெற்றன.

சட்டத்திலோ காவிரி பாயும் திருச்சி, அரியலூர் மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளைக் காணவே காணோம். திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட லால்குடி, திருவரங்கம், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், அரியலூர் மாவட்டத்தின் திருமானூர், டி.பழூர், கரூர் மாவட்டம் குளித்தலை, ஆகிய வட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. இவை இணைக்கப்பட்டால்தான் காவிரிப் படுகை பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமையும் என்கிறது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

அடுத்து, புது சட்டத்தின் 4 (2) (1) அ பிரிவானது, சட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானதாக இருக்கிறது. அதாவது இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் செயல்பட்டுவரும் திட்டங்கள் மட்டுமின்றி, அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கும்கூட தடை இல்லை! இதென்ன கதை என்கிறீர்களா, இது கதை அல்ல நிஜம்! சட்டத்தின் நோக்கமாக அமைச்சர் சொன்னது இதுதான் : "கடந்த சில ஆண்டுகளில் விவசாயமல்லாத பல செயல்பாடுகளால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு மாநில உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிட்டது".

அமைச்சரின் இந்தக் கருத்தை வேறுவகையில், சொல்வோமானால், ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்பைத் தடுக்கவே புது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், பழைய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் அப்படியே தொடர்ந்து செயல்பட இதே சட்டம் அனுமதிக்கும் என்றால், அது உணவு உற்பத்திக்கு சாதகமாகவா இருக்கும்? விவசாயிகளுக்கு பாதகமாகத்தானே இருக்கமுடியும்!?

டெல்டா மக்களின் பாராட்டுக்கு உரியவரா எடப்பாடி பழனிசாமி? - விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க அரசு!

மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் பெட்ரோலியக் குழாய்த்தடங்கள், துறைமுக வசதிகளுக்கு தடை இருக்காது என்றும் இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதி. இப்படியான பாதிப்புகளுக்கு எதிராக மட்டுமேகூட சில பகுதிகளில் விவசாயிகள் தனியாக கூட்டியக்கம் கட்டி போராடிவருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மீத்தேன் எடுக்க, திரவ பெட்ரோலியம் எடுக்க என தனித்தனியாக அனுமதி பெறவேண்டிய தேவை இருந்தது. அண்மையில் மைய அரசு செய்துள்ள மாற்றத்தின்படி, நிலத்துக்குக் கீழ் எடுக்கப்படும் எல்லா புதைவு எரிமங்களுக்கும் ஒற்றை ஹைட்ரோகார்பன் அனுமதி இருந்தால் போதுமானது; அத்தோடு இனி மாநில அரசுகளின் தடையின்மைச் சான்றோ அனுமதியோ அவசியமில்லை. இது பற்றி இந்த சட்டத்தில் ஒரு சிறு குறிப்பும் இல்லை.

இன்னொரு சங்கதி, கடலோரப் பயிர்நிலங்கள் அருகிவருவது. அதாவது, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் ஜனகராஜனின் ஆய்வில், காவிரிப் படுகையின் கடைமடையில் நாகை முதல் கடலூர் மாவட்டம் வரை 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு காணாமல் போய்விட்டது. ஹைட்ரோகார்பன் திட்டங்கள், மணல்கொள்ளை போன்ற பல காரணங்களால் நிகழ்ந்த இந்த அழிவைப் பற்றி புதிய சட்டத்தில் துளியேனும் சொல்லப்படவில்லை. 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த அபாயத்தின் அளவு, இன்னும் அதிகரிப்பதற்குத்தான் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள், நிலவியல் வல்லுநர்கள்.

தமிழர் நாட்டுக்கெல்லாம் சோறுபோட்ட காவிரி விவசாயிக்கு எலிக்கறியை உண்ணத் தந்த ஜெயலலிதாவுக்கு பொன்னியின் செல்வி பட்டம்! காவிரிப் படுகையைக் காணாமல்போகச் செய்யும் காரியத்தைச் செய்யும் எடப்பாடி பழனிசாமிக்கு, அதைப்போல ஒரு ஆகாசப் பட்டமும் பாராட்டும்...

மீண்டும் ஒரு முறை காவிரி விவசாயிகளின் வயிறு எரிகையில்!

Related Stories

Related Stories