Tamilnadu

ரூ.1.5 கோடி சொத்தைப் பறித்து, தந்தையை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள்- முதியவருக்கு நியாயம் செய்த அதிகாரிகள்!

தந்தையை கவனிக்கத் தவறிய பிள்ளைகள் மாதாமாதம் தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருநெல்வேலி பாலபாக்யா நகரைச் சோ்ந்தவா் சுடலைமணி (77). இவரது பெற்றோர் கந்தசாமி- ஜானகியம்மாள் சுதந்திரப் போராட்டத் தியாகிகள். தாயார், சுதந்திரப் போராட்டத்தில் கைதாகி, அதிக நாட்கள் சிறையில் இருந்ததால் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கௌரவிக்கப்பட்டவர்.

அரசு ஒப்பந்ததாரராக இருந்த சுடலைமணிக்கு 2 மனைவிகள். மூத்த மனைவி இறந்துவிட்டாார். மூத்த மனைவிக்கு ஒரு மகனும், 2ஆவது மனைவிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

சுடலைமணி தனது இளைய மகன் கந்தகுமார் மற்றும் மகள் விஜயலட்சுமிக்கு தனது வீட்டை எழுதிக் கொடுத்துள்ளாா். அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூபாய் 1.5 கோடி எனத் தெரிகிறது. சொத்தை பெற்ற பிறகு கந்தகுமாா் உள்ளிட்டோர் சுடலைமணியைக் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட சுடலைமணி, வேதனையடைந்து தன்னைக் கவனிக்கத் தவறிய தனது மகன் மீது நடவடிக்கை கோரியும், தனது சொத்தை மீட்டுத்தரக் கோரியும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் புகார் அளித்தார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இந்தப் புகாரை கோட்டாட்சியர் மணிஷ் நாரணவரே விசாரித்தார். விசாரணையில், சுடலைமணியை கவனித்துக் கொள்ளாமல் வீட்டை அபகரித்துக்கொண்டு, வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

எனவே, மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007இன் படி சுடலைமணிக்கு உணவு, உடை, மருத்துவச் செலவுக்காக அவரது மகன்கள் கந்தகுமார் ரூ. 4 ஆயிரம், விஜயகுமார், சிவக்குமார் தலா ரூ. 2ஆயிரம், மகள் விஜயலெட்சுமி ரூ. 2 ஆயிரம் என மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டார்.

மேலும், அப்படி வழங்கத் தவறினால், சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியதிருக்கும் எனவும் எச்சரித்து உத்தரவிட்டார். தந்தையை கவனிக்காமல் விட்ட பிள்ளைகளுக்கு இந்த நடவடிக்கை எச்சரிக்கையாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேற்றிய மகனிடமிருந்து சொத்து பறிமுதல்: வயதான தந்தையிடம் ஒப்படைப்பு!