Tamilnadu
நேர்மையாக பணியாற்றி 8 முறை இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ கூலி வேலை தேடும் அவலம்- எடப்பாடி ஆட்சியில் கொடுமை!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பயிற்சி முடித்து காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். விரும்பித் தேர்வு செய்த காவல்துறை பணி என்பதால் மற்ற அதிகாரிகள் செய்யும் தவறுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனத் தெரிகிறது.
நேர்மையாகப் பணியாற்றியதன் விளைவாக கடந்த 9 ஆண்டுகளில் 8 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சென்னை ஆயுதப்படையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் பகுதி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே சென்னை ஆயுதப்படையில் பணியாற்றிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை என மாவட்ட எஸ்.பி, ராஜ்குமாருக்கு மெமோ கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஜனவரி மாதம் வழங்கப்படவேண்டிய சம்பளமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த காவலர் ராஜ்குமார் 15 நாள் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். குடும்ப செலவுகளை ஈடுகட்டமுடியாமல் சிரமங்களைச் சந்தித்து வந்த ராஜ்குமார் தனது பணியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார்.
அதன்படி, கடந்த 15-ம் தேதி தனது பணி குறித்து ஃபேஸ்புக்கில் மனக்குமுறலுடன் பதிவு செய்துள்ளார் ராஜ்குமார். அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பதிவை பிறகு ராஜ்குமார் நீக்கியுள்ளார். நேர்மையான போலிஸார் பணியில் இருந்து விலகும் லட்சணத்தில்தான் எடப்பாடியின் காவல்துறை இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், சம்பளம் இல்லாததால் மிகுந்த பொருளாதார பாதிப்பை சந்தித்து வந்துள்ளார் ராஜ்குமார். இந்நிலையில் மீண்டும் பணிக்குச் செல்ல முடியாமல் ஏதாவது கூலி வேலை செய்யலாம் என்று முடிவெடுத்த ராஜ்குமார் கடந்த வாரம் அவர் வசிக்கும் பகுதியின் அருகில் இருந்த இளநீர் கடையில் சென்று வேலை கேட்டுள்ளார்.
போலிஸாருக்கு இந்த வேலையை எப்படி கொடுப்பது என்று யோசித்த இளநீர் கடைக்காரர் வேலை கொடுக்க மறுத்துள்ளார். அதனையடுத்து மீன் பிடிக்கும் வேலைக்குச் செல்லவும் முயன்றுள்ளார். ஆனாலும் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது சொந்தமாக பெட்டிக்கடை வைக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு இளம் காவலரை நேர்மையாகப் பணியாற்ற அனுமதிக்காமல் கடும் மனவேதனைக்கு ஆளாக்கிய அரசு, ராஜ்குமாரை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!