தமிழ்நாடு

“நேர்மையாக பணியாற்றியதால் 9 ஆண்டுகளில் 8 முறை பணியிடமாற்றம்” - மனங்குமுறி வேலையைத் துறந்த எஸ்.ஐ!

நேர்மையாகப் பணியாற்றிய காவலர் ஒருவர் பணியிலிருந்து விலகுவதாக வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பயிற்சி முடித்து காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். விரும்பித் தேர்வு செய்த காவல்துறை பணி என்பதால் மற்ற அதிகாரிகள் செய்யும் தவறுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனத் தெரிகிறது.

நேர்மையாகப் பணியாற்றியதன் விளைவாக கடந்த 9 ஆண்டுகளில் 8 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சென்னை ஆயுதப்படையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் பகுதி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே சென்னை ஆயுதப்படையில் பணியாற்றிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை என மாவட்ட எஸ்.பி. ராஜ்குமாருக்கு மெமோ கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஜனவரி மாதம் வழங்கப்படவேண்டிய சம்பளமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் விரத்தியடைந்த காவலர் ராஜ்குமார் 15 நாள் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். முறையாக குடும்ப வருமானத்தை ஈடுகட்டமுடியாமல் சிரமங்களை சந்தித்து வந்துள்ள ராஜ்குமார் தனது பணியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி, கடந்த 15-ம் தேதி தனது பணி குறித்து ஃபேஸ்புக்கில் மனக்குமுறலுடன் பதிவு செய்துள்ளா ராஜ்குமார். அதில், “தலையிலும் முகத்திலும் இருக்கும் முடியைக் கூட நம் இஷ்டப்படி வைத்து கொள்ளமுடியாத பணி; சொந்த பந்தங்களின் வீட்டு நல்லது கெட்டதில் கலந்து கொள்ள இயலாத பணி; பண்டிகைகளையோ நம் குடும்ப விழாக்களையோ நமது மனைவி மக்களோடு அனுபவிக்க முடியாத பணி, காலவரையற்ற பணி, வாராந்திர ஓய்வில்லா பணி, அரசு விடுமுறைகள் எதையும் அனுபவிக்க முடியாத பணி.

“நேர்மையாக பணியாற்றியதால் 9 ஆண்டுகளில் 8 முறை பணியிடமாற்றம்” - மனங்குமுறி வேலையைத் துறந்த எஸ்.ஐ!

இம்மாதம் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என உயரதிகாரிகளால் மாதம்தோறும் அறிக்கை அனுப்பப்படும் ஒரே பணி, அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுமுறையைக் கூட நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி, அமைச்சு பணியாளர்களின் வேலையையும் நம்மீது சுமத்தி நாம் செய்ய தவறினாலோ மறுத்தாலோ நமக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளை வழங்கும் பணி, மொத்தத்தில் இவற்றையெல்லாம் வெளியே சொல்லக்கூட முடியாதபடி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரே பணி.

இதுபோன்ற மன அழுத்தத்தின் காரணமாக செய்யும் தவறுகளினால் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து வெறுப்பை சம்பாதிக்கும் பணி, இவற்றையெல்லாம் கேட்பதற்கு சங்கங்கள் அமைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரே பணி, நாடு சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டு ஆகியும் சுதந்திரம் கிடைக்காத ஒரே பணி - சீருடைப் பணியாளர் எனும் காவல் பணி.

இத்தனைக்கும் முன்வைக்கும் ஒரே சொல் "கட்டுப்பாடான துறை" ஏன் உயரதிகாரிகளுக்கு அந்த கட்டுப்பாடு பொருந்தாதா?

- இப்படிக்கு, விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன். இதுவரை ஆதரவு வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி. அதிகாரம் செலுத்த நினைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories