Tamilnadu

சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூடுங்கள்.. இல்லையெனில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி அலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை புழலை சேர்ந்த சிவமுத்து என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட வாரியாக அமைந்துள்ள குடிநீர் உற்பத்தி அலைகள் குறித்த பட்டியலை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், உரிமம் பெறாமல் செயல்படக்கூடிய 132 ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி பொதுபணித்துறை தலைமை பொறியாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அர்த்தமற்றது என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தபடவில்லை என சாடினர்.

நிலத்தடி நீரை எடுக்கும் ஆலைகளுக்கு உரிமம் வழங்க வகை செய்யும் அரசாணையை உறுதி செய்து 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகளை மூட பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து மார்ச் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த ஆலை அல்லாமல் நிலத்தடி நீரை எடுக்கும் கிணறு அல்லது போர்வெல் பகுதியை மட்டும் மூடி சீல் வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர்கள் இந்த பணியை முறையாக செயல்படுத்தாவிட்டால், தமிழக அரசின் தலைமை செயலாளரையும் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.