Tamilnadu

“பணியிடங்களில் பாலியல் தொல்லை தடை சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது” - வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

பணியிடங்களில் பெண்களின் கண்ணியத்தையும், சுயமரியாதையையும் காக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட, 'பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்ட'த்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீடு அலுவலகத்தில் துணை பதிவாளராக பணியாற்றியவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி பதிவாளராக பணியாற்றிய பெண் ஒருவர், அத்துறையின் பதிவாளரிடம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் உட்புகார் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை நியாயமாக இருக்காது எனக் கூறி, பெண் அதிகாரி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.

புகார்தாரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய மாவட்ட சமூக நல அதிகாரி தலைமையிலான இந்த குழு, துணை பதிவாளருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி பதிவாளருக்கு கடிதம் அனுப்பியது.

இதற்கிடையில், வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீட்டு துறை பதிவாளர் அமைத்த விசாரணை குழுவை செல்லாது என அறிவிக்க கோரி பெண் உதவி பதிவாளர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், தமிழக சமூக நலத்துறை அதிகாரி தலைமையில் ஆரம்பகட்ட விசாரணையை முடித்துவிட்டதால், பதிவாளர் அமைத்த குழு சட்டவிரோதமானது என உத்தரவிட்டது.

மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவை எதிர்த்தும், சமூக நலத்துறை அமைத்த விசாரணை குழு நடவடிக்கையை எதிர்த்தும் துணை பதிவாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு, பணியின் போது, வேலை வாங்குவதற்காக வரம்பு மீறி திட்டினார் என்ற குற்றச்சாட்டு, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடை சட்டத்தின் கீழ் குற்றமாகாது எனக் கூறி, மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவையும், சமூக நலத்துறை குழுவின் விசாரணை அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

பொய்ப் புகார் அளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையை காக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Also Read: ”முஸ்லிம் எதிர்ப்பு தான் RSS-ன் நிலைப்பாடு, அதை ஏன் மறைக்க வேண்டும்?” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ‘குட்டு’