File Image
Tamilnadu

“விதியை தவறாகச் சுட்டிக்காட்டுகிறார் சபாநாயகர்” - வெளிநடப்பு செய்தது ஏன் என தி.மு.க தலைவர் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று கேள்வி இல்லா நேரத்தின்போது பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்ததையடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து அடையாள வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டபோது சபாநாயகர் தொடர்ந்து ஆய்வில் இருக்கிறது என்று தெரிவித்துவந்தார்.

தற்போது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்பாக இதுகுறித்து சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இன்று நேரம் இல்லா நேரத்தில் அது என்ன ஆயிற்று எனக் கேள்வி எழுப்பினோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி இருக்கிறார்கள்.

இந்த அராஜக நடவடிக்கையால் பலர் காயமடைந்து இருக்கிறார்கள். போலிஸ் கமிஷனர் அவர்களை அழைத்துப் பேசி இருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் ஆகியோரும் அழைத்துப் பேசியதாகசெய்தி வந்தது. ஆனால் அதுபற்றியெல்லாம் எந்த ஒரு விளக்கமும் இந்த சபையில் முதல்வர் சொல்லவில்லை.

வண்ணாரப்பேட்டை போராட்டம்

சபாநாயகர் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடரில் நீங்கள் எடுத்து வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில் அதை மீண்டும் கூட்டத்தொடரில் எடுக்கக்கூடாது எனச் சொல்கிறார்.

ஏற்கெனவே அது விவாதிக்கப்படவில்லை. விவாதிக்கப்பட்டு நிராகரித்து இருந்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அப்போதே ஆய்வில் இருக்கிறது என்றுதான் சொல்லி இருக்கிறார். சட்டமன்ற விதி 173 ல் இதுகுறித்து தெளிவாக இருக்கிறது .

CAA எதிர்ப்பு தீர்மானம் குறித்துப் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து, அதைக் கண்டிக்கக் கூடிய வகையில் வெளிநடப்பு செய்தோம். வெளிநடப்பு என்றால் நிரந்தர வெளிநடப்பு அல்ல; அடையாள வெளிநடப்பு தான் செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Also Read: “வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்த தூண்டியது யார்?” - சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!