Tamilnadu

செங்கல்பட்டு டோல்கேட் தகராறின் போது திருடுபோன ரூ.18 லட்சம் : ஊழியர்களே கைவரிசை காட்டியது அம்பலம்!

குடியரசு தினத்தன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வந்தடைந்த போது சுங்கச்சாவடி ஊழியர்கள் ஃபாஸ்டேக்கில் கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் வழியை மறித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக அப்பகுதியில் 5 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.

அப்போது பேருந்தில் இருந்த சில பயணிகள் ஓட்டுநருக்கு ஆதரவாக பேசினர். இதனால் முற்றிய வாக்குவாதம் கைகலப்பாக மாறி பொதுமக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதில், சுங்கச்சாவடி பூத், சி.சி.டி.வி கேமராக்கள், ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் விகாஸ் குப்தா, குல்தீப் சிங் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் நாராயணன், நடத்துநர் பசும்பொன் ஆகியோரை கைது செய்தனர்.

இதனிடையே கடந்த 27-ம் தேதி சுங்கச்சாவடியில் இருந்த ரூபாய் 18 லட்சம் காணாமல் போனதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்த போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

Also Read: செங்கல்பட்டு டோல்கேட் தகராறின் போது 18 லட்சம் ரூபாய் மாயம் : திருடு போனது உண்மையா என போலிஸ் விசாரணை!

இந்த விசாரணையில் திடீர் திருப்பமாக பரனூர் சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே பணத்தை திருடியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த திருட்டு விவகாரத்தில் தொடர்புடைய செந்தில் மற்றும் பரமசிவத்திடம் இருந்து பணத்தை போலிஸார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, சுங்கச்சாவடி சீரமைக்கப்படும் வரை கட்டணம் வசூலிக்கமாட்டோம் என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also Read: திமிர் பேசிய வட இந்தியர்கள் - செங்கல்பட்டு டோல்கேட்டை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!