Tamilnadu

"மருந்து தெளித்தும் பயனில்லை" : நெற்பயிரைப் பாழாக்கிய புதிய வைரஸ் - அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக மகசூலைக் கொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் கடந்த வாரம் முதன்முதலாக ராதாகிருஷ்ணன் என்பவரின் வயலில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களின் மேல் மஞ்சள் நிற கட்டிகள்போல் காணப்பட்டது.

வயல்முழுக்க பரவி இருந்த இந்தக் கட்டியால் அடுத்த இரண்டு நாட்களிலேயே நெற்பயிர்கள் கருப்பு நிறமாக மாறிக் கருகியுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்துப் போன விவசாயி ராதாகிருஷ்ணன், அக்கம்பக்கம் உள்ள விவசாயிகளிடம் விசாரிக்கும் போது அவர்கள் வயலிலும் இந்த பாதிப்பு ஏற்படுள்ளது தெரியவந்துள்ளது.

நெற்பயிரை தாக்கிய லட்சுமி வைரஸ்

பின்னர் மருந்து கடைகளுக்கு சென்று பயிரின் நிலைமையை கூறி மருந்துகளை வாங்கி வந்து இதுவரை 3 முறை தெளித்துள்ளனர். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

இதையடுத்து விவசாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளை அழைத்துக்கொண்டு பயிர்களை பரிசோதித்த வேளாண் அதிகாரிகளிடம் நெற்பயிர் பாதிப்பு குறித்து கூறியுள்ளனர்.

பயிர்களை பரிசோதித்த வேளாண் அதிகாரிகள், இந்த பாதிப்பு வைரஸால் ஏற்பட்டுள்ளது. இது லட்சுமி வைரஸ் என்ற வகையை சார்ந்த கிருமியின் தாக்குதல் என்றும், இந்த வைரஸ் பயிர்களை குறிவைத்து தாக்கி நோயை உண்டாகும் என கூறியுள்ளனர்.

நெற்பயிரை தாக்கிய லட்சுமி வைரஸ்

மேலும், அதிக மகசூல் உள்ள வயல்களில் நெற்கதிர்களில் இந்த நோய் மின்னல் வேகத்தில் காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் பயிரிடுவதற்காக வாங்கிய கடனை எப்படி கட்டப்போகிறோம் என தெரியவில்லை எனக் கவலையடைந்துள்ளனர். ஆகையால், அரசு தங்களுக்கு வங்கிக் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும், உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: விவசாயிகள் விரோத பா.ஜ.க, அ.தி.மு.க அரசுகளை கண்டித்து தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!