Tamilnadu

2019-ம் ஆண்டு தமிழகத்துக்கு தேவையான மழை கிடைத்தா? - என்ன சொல்கிறது வானிலை மையம்!

2019ம் ஆண்டின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதில், “2019ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 454 மி.மீ. இது இயல்பு அளவான 447 மில்லி மீட்டரை விட 2 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு 24% மழை இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது. 6 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 22 மாவட்டங்களில் இயல்பு அளவை ஒட்டியும், 5 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் இயல்பை விட 64 சதவிகிதமும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 28% மழை பதிவாகியுள்ளது.

ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 907 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆனால் இயல்பு அளவான 943 மி.மீட்டரை விட 4 சதவிகிதம் குறைவாகியுள்ளது.

ஆண்டு அளவில் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டின் மழை அளவு 2018ம் ஆண்டைவிட 14% குறைவாகும். 2019ம் ஆண்டில் 8 புயல்கள் உருவானது. அதில், 3 வங்கக்கடலிலும், 5 அரபிக்கடல் பகுதியிலும் உருவானது. இதில் அரபிக்கடலில் வலுவான புயல்கள் தொடர்ந்து உருவானது.

மேலும், 1996ம் ஆண்டுக்கு பிறகு நடப்பு ஆண்டில் தான் இந்தியக்கடல் இருமுனை நிகழ்வுகள் அதிக அளவில் நடந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அக்டோபர் முதல் டிசம்பர் காலகட்டத்தில் 633 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவான 759 மி.மீ.ல் இருந்து 17% குறைவாக பெய்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை மற்றும் புதுவை 9 செ.மீ, சீர்காழியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அடுத்த 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடரும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.