Tamilnadu
சரியான சுடிதாரை மாற்றித் தர மறுத்த துணிக்கடைக்கு 20,000 ரூபாய் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி டவுன் பகுதியைச்சேர்ந்தவர் நெல்லையப்பன். இவரது மனைவி கோமதி.கடந்த அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு கோமதி, தனது மகள்கள் இருவருக்கும் துணி எடுப்பதற்காக நெல்லை டவுன் வடக்கு ரத வீதியில் உள்ள துணிக்கடைக்குச் சென்றுள்ளார்.
அங்கு தனது 11 வயது மகளுக்கு 1000 ரூபாயிலும், 7 வயது மகளுக்கு 700 ரூபாயிலும் சுடிதார் வாங்கியுள்ளார். அங்கு துணியை போட்டு பார்க்கும் ட்ரையல் ரூம் வசதி இல்லை. கடையின் ஊழியர்கள் உடை அளவு சரியாக இருக்கும் என கூறியதால், கோமதி துணியை வாங்கி சென்றுள்ளார்.
பின்னர் வீட்டில் சென்று ஆடைகளை அணிந்து பார்த்தபோது, மூத்த மகளுக்கு சுடிதார் சரியாக இருந்துள்ளது. இருப்பினும் பேன்ட் சிறிதாக இருந்துள்ளது. இதனையடுத்து கோமதி, அக்டோபர் 19ம் தேதி அன்று ஜவுளிக்கடைக்குச் சென்று உடையை மாற்றித் தரும்படி கேட்டுள்ளார். அப்போது, கடைக்காரர்கள் உடையை மாற்றித் தர முடியாது, பணத்தையும் திருப்பித் தர முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
அப்படியானால் இந்த துணியை என்ன செய்வதென கோமதி கேட்டதற்கு, ”முடிந்தால் பயன்படுத்து இல்லையெனில், மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்துள்ள அன்புச்சுவருக்கு தானமாகக் கொடு” என ஏளனமாகக் கூறி, அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, ஜவுளிக்கடை தன்னை நடத்திய விதம் குறித்து ஆதாரங்களுடன் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் கோமதி வழக்குத் தொடர்ந்தார். தனக்கு ஏற்பட்ட அலைச்சல், மன உளைச்சல், அவமானம் அனைத்திற்கும் சேர்த்து ஜவுளிக்கடையினர் 95,000 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோமதி முறையிட்டார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ஜவுளிக்கடையினர் உரிய விளக்கம் அளிக்கவில்லை, பொருளையும் மாற்றித்தரவில்லை என உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
அதில், ஜவுளிக்கடை நிறுவனம் செய்தது நேர்மையற்ற வாணிபம் மற்றும் சேவை குறைபாடு ஆகும். எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.15,000 மற்றும் வழக்குச் செலவு ரூ.5000 ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், மனுதாரரிடம் கொடுத்த சுடிதாரை ஜவுளிக்கடை நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்டு சுடிதார் விலை 1000 ரூபாயைத் திரும்ப வழங்க வேண்டும். 1 மாத காலத்தில் வழங்கத் தவறினால் 6% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். 1000 ரூபாய் சுடிதாரை மாற்றித் தராமல், திமிறாகப் பேசியதன் விளைவாக அந்த ஜவுளி நிறுவனத்திற்கு தற்போது 20,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” : ஆர்.என்.ரவி கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த முரசொலி!
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !