Tamilnadu

ஐஐடியில் மத - சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவது தொடர்ந்து நீடிக்கிறது: - கே.பாலகிருஷ்ணன் வருத்தம்!

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் சமூகவியல் துறையில் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த பாத்திமா கடந்த நவம்பர் 9-ம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றினர். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகமும் போலிஸாரும் உண்மையான காரணங்களை கூறாமால் மூடிமறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளிட்டுள்ளார். அதில்,“மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் சுதர்சன் பத்மநாபனின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பாத்திமா லத்தீப்

தொடர்ந்து இந்த மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தற்கொலை செய்து கொள்வதாக பாத்திமா, குறிப்பு எழுதி வைத்துள்ளது நெஞ்சை உலுக்குகிறது. சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், காவல்துறையினர் அப்புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மறுத்து கிடப்பில் போட்டுள்ளனர். ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பாகுபாடு காட்டப்படுவது தொடர்ந்து நீடித்து வருவதாகவே தெரிகிறது.

இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தகைய மோசமான பாகுபாடான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐந்து பேர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர்.

இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் இதுவரை எந்தவிதமான முறையான விசாரணையோ, நடவடிக்கையோ மேற்கொள்ளாதது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக காவல்துறை இதுகுறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.