Tamilnadu

அ.தி.மு.க கொடிக்கம்பத்தால் ஏற்பட்ட விபத்து - இளம்பெண் படுகாயம்!

சிங்காநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரியும் அனுராதா, சின்னியம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் சாலையோரத்தில் அ.தி.மு.க கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் வந்த அனுராதா கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததைக் கவனித்து தன் மீது விழாமல் தவிர்ப்பதற்காக வண்டியை நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது, பின்னால் வந்த லாரி அனுராதாவின் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். காலில் படுகாயமடைந்த அனுராதாவிற்கு நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

விபத்திற்குக் காரணமாக இருந்தது அ.தி.மு.க பிரமுகர் இல்லத் திருமணத்திற்காக சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிகம்பங்கள் எனத் தெரியவந்துள்ளது. அ.தி.மு.க கொடிக்கம்பத்தால் விபத்து ஏற்பட்டதை காவல்துறையினர் மறைக்க முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் 11-ம் தேதி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கட்சிக் கொடி கம்பம் நடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லையே.” என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.