Tamilnadu

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகம், புதுவையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் அதிகபட்சமாக 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் சங்கராபுரம் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடற்பகுதியில் மீனவர்களுக்கு எவ்விதமான எச்சரிக்கையும் இல்லை. ஆனால் புல்புல் புயல் காரணமாக ஒரிசா,மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.