Tamilnadu

பால், காய்கறி வரிசையில் மெட்ரோ குடிநீர் கட்டணமும் உயர்கிறது - குமுறும் பொதுமக்கள்!

சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு பெரும்பாலும் லாரியின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது இந்த குடிநீரின் விலையும் உயர்ந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுக்குமாடி மற்றும் வீட்டு உபயோகத்திற்காக தேவைப்படும் லாரி குடிநீரின் கட்டணம் 5% உயர்த்தப்பட்டுள்ளது. 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரியின் கட்டணம் 360ல் இருந்து 400 ரூபாயகவும், 6000 லிட்டர் லாரி தண்ணீர் 435ல் இருந்து 499 ஆகவும், 9000 லிட்டர் கொண்ட லாரி தண்ணீர் 700ல் இருந்து 735 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள், தனியார் உணவு விடுதிகள் போன்ற வர்த்தக தேவைக்கான லாரி குடிநீரின் கட்டணமும் 10% உயர்த்தப்பட்டுள்ளது. அதில், 3000 லிட்டர் லாரி குடிநீர் 450ல் இருந்து 500 ஆகவும், 6000 லிட்டர் 675ல் இருந்து 735ஆகவும், 9000 லிட்டர் 1000ல் இருந்து 1050 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் இணையத்தில் பதிவு செய்தால் 30 நாட்களுக்கு பிறகே தண்ணீர் கிடைக்கும் நிலையில், அதன் சேவையை சரிசெய்யாமல் கட்டணத்தை உயர்த்தியது நியாயமற்றது என்கின்றனர் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர்.

குடிநீர் வாரிய நிர்வாக சீர்கேட்டை சரிசெய்து, கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என மெட்ரோ சிஐடியூ தொழிற்சங்கத் தலைவர் பீமராவ் கூறியுள்ளார்.

மக்களுக்கு தங்குத்தடையில்லாமல் உரிய நேரத்தில் தண்ணீர் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட மெட்ரோ வாரியம் தற்போது வணிக மயமாகி வருவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.