Tamilnadu
“லலிதா ஜூவல்லரி சுவரில் கொள்ளையர்கள் ஒரே நாளில் துளையிடவில்லை” - திருச்சி கமிஷனர் புதிய தகவல்!
திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் 2ம் தேதி ரூபாய் 13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த போலிஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையே திருவாரூர் விளமல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் மணிகண்டன் என்பவரை போலிஸார் பிடித்தனர். அவரிடமிருந்த 5 கிலோ கொள்ளை நகைகளை போலிஸார் கைப்பற்றினர்.
விசாரணையில் திருவாரூர் முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன், தலைமறைவான சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், சுரேஷ் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் சரணடைந்தார். போலிஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் அக்டோபர் 11ம் தேதி பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் 11-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.
திருவாரூர் முருகன் மீது பெங்களூருவில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவனை காவலில் எடுத்து பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளி போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
முருகன் அளித்த தகவலின் அடிப்படையில், பெரம்பலூரில் உள்ள காட்டுப்பகுதியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ தங்க நகைகளை பெங்களூரு போலிஸார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பிடிபட்டுள்ளனர். நகைக்கடை கட்டிடத்தை 2 அல்லது 3 முறை நோட்டமிட்டுள்ளனர். துளை போட்டதை ஒரே நாளில் செய்யவில்லை.
சுவரை 4 அல்லது 5 நாட்களாகத் துளையிட்டு பின்னர் உள்ளே புகுந்து கொள்ளையடித்துள்ளனர். நகைக்கடையின் முன்புறம் காவலாளிகள் இருப்பதும், பின்புறம் பயன்பாடின்றி பள்ளி வளாகம் இருந்ததும் அவர்களுக்கு வசதியாகிவிட்டது.
முருகனை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதில் நமக்கு எதுவும் சிக்கல் இல்லை. கர்நாடக போலிஸார் விசாரணையை முடித்த பின்னர், நாம் காவலில் எடுக்கக் கேட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் முறையாக மனு கொடுத்துள்ளோம். அவர்கள் விசாரணை முடிந்த பின்னர் நாம் காவலில் எடுத்து விசாரிக்கலாம்.
கொள்ளையர்கள் வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது குறித்து முழுமையான தகவல்கள், மீதி நகைகள் எங்குள்ளன என்பது குறித்து விசாரணையில் தெரியவரும். பிடிபட்ட சிலரிடம் நடத்திய விசாரணையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் மேலும் சில வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகத் கூறியுள்ளனர்.
பெங்களூர் போலிஸார் சட்டவிரோதமாக இங்கு வந்து நகைகளைத் தோண்டி எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் முறைப்படியே நடந்துள்ளனர். எங்களுக்கும் கர்நாடக போலிஸாருக்கும் நல்ல நட்புரீதியான ஒத்துழைப்பு உள்ளது.
கொள்ளைபோன நகைகள் 100 சதவீதம் மீட்கப்படவில்லை. முருகனை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் மற்ற நகைகள் மீட்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!