Tamilnadu

“நீயெல்லாம் என்னை எதிர்த்துப் பேசுவியா?”: சாதிய ரீதியாக திட்டி தலித் மாணவனை தாக்கிய சக மாணவன்!

சமீபகாலமாக சாதிய ரீதியான ஒடுக்கு முறையும் தீண்டாமையும் அதிகரித்து வருகிறது. சுடுகாட்டிற்கு பாதை மறுப்பு, கால் மேல் கால்போட்டு அமர்ந்தவருக்கு அரிவாள் வெட்டு என நடந்து வந்த சாதி ரீதியான தாக்குதல் ஒருபடி மேலே சென்று பள்ளிகளுக்குள் புகுந்துள்ளது. தீண்டாமை தவறு என கற்றுக்கொள்ளும் இடத்திலேயே சாதிய பாகுபாடு தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே உள்ள மறவப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணகுமார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சரவணகுமார், பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல நேற்றையதினம் பள்ளிக்குச் சென்றுள்ளார் சரவணகுமார். அப்போது இவரது வகுப்பில் படிக்கும் சக மாணவரான மோகன்ராஜ் என்பவரின் புத்தகப் பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்துவைத்து அந்த மாணவரை அலைக்கழித்துள்ளார்.

இதனால் மோகன்ராஜுமும், சரவணகுமாரும் புத்தகப்பையை மறைத்து வைத்த மகா ஈஸ்வரனிடம் கேட்டுள்ளனர். பையை கொடுக்கவில்லை என்றால் ஆசிரியரிடம் தெரிவித்துவிடுவோம் எனக் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன், சரவணகுமாரை “நீயெல்லாம் என்னை எதிர்த்துப் பேசுவியா” என்று சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி சண்டையிட்டுள்ளான். இந்த சண்டையின்போது டப்பாவில் வைத்திருந்தா பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான்.

சரவணகுமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரவணகுமாரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தகவலறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் மகனை வந்து பார்த்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி தலைமையாசிரியருக்குக் கேரிக்கை வைத்தனர். பள்ளி மாணவன் சாதிய ரீதியில் தாக்குதல் நடத்திய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.