Tamilnadu

ஹாலிவுட் பாணியில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது !

திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜூவல்லரி, 3 தளங்களுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் பணிகளை முடித்து விட்டு ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், இரவில் கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் தரைத் தளத்தில் இருந்த நகைகள் கொள்ளையடித்து சென்றனர். இந்த விவகாரத்தால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

விசாரணையின்போது, 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் சிசிடிவிக்காட்சிகளை ஆய்வு செய்த போது, சினிமா படங்களில் வருவது போல, ஜோக்கர் மாஸ்க், மிளகாய் பொடி, துளையிட்டு உள் நுழைதல் போன்ற செயல்களில் கொள்ளையடிக்க ஈடுபட்டதையும் போலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்கை 7 காவல்துறை அதிகாரிகள் குழு கொண்ட தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பைக்கில் வேகமாக வந்தவர்களை நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்கள். அதில் ஒருவனை போலிஸார் மடக்கி பிடித்தனர். அதில் மற்றொருவன் தப்பியோடி விட்டான்.

பிடிப்பட்ட நபரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற மடப்புரம் மணிகண்டன் (32) என்று தெரியவந்தது. இவரிடம் விசாரித்தபோது திருச்சி நகை கொள்ளையில் இவன் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரிந்தது.

அவன் வைத்திருந்த பையில் இருந்த நகைகளில் இருந்த பார்கோடுகளை ஸ்கேன் செய்துபார்த்தபோது அது லலிதா ஜூவல்லரி நகைகடையில் கொள்ளை போனது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தப்பியோடிய மற்றொரு கொள்ளையன் திருவாரூரை சேர்ந்த சுரேஷ் என்பவனை பிடிக்க திருவாரூர் முழுவதும் போலிஸார் தேடி வருகின்றனர். சுரேஷை பிடிக்க தனிப்படையினர் அவனது வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.