Tamilnadu

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்? - சென்னை வானிலை மையம் கணிப்பு!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 24 மணிநேரத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 48 மணிநேரத்திற்கு பிறகு வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

இதனையடுத்து, தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை காலகட்டம் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்த நிலையில் இதுவரை பெய்த மழையால் தமிழகத்துக்கு வழக்கத்தை விட 16% அதிக மழை கிடைத்துள்ளது. அதேபோல், இந்திய அளவில் 97 செ.மீ மழை அதிகரித்துள்ளது என சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் 44 செ.மீ கிடைக்கவேண்டிய மழை தென்மேற்குப் பருவமழை காலத்தில் 59 செ.மீ கிடைத்துள்ளது என்றும் இது 34% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை அடுத்த 3 வாரத்தில் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.