Tamilnadu
சுபஸ்ரீ மரணம்: பேனர் வைத்தவர்களை விட்டுவிட்டு தயாரித்தவர்களை கைது செய்தது ஏன்? - அரசுக்கு நீதிபதி குட்டு
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என டிஜிட்டல் பேனர் அச்சகத்துக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அ.தி.மு.க பிரமுகரின் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி டிஜிட்டல் பேனர் அச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி, கடந்த 19ம் தேதி அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், உயர்நீதிமன்றம் டிஜிட்டல் பேனர்களை தடை செய்யவில்லை என்றும், பிரின்டிங் பிரஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் நிறுவனங்களுக்கு சீல் வைக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
டிஜிட்டல் பேனர் எங்கு வைக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என்றும், யார் விதிகளை மீறி பேனர் வைத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கோபத்தைக் காட்டக்கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், யாருக்காக பேனர் அச்சடிக்கிறார்கள், எங்கு வைக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்கள் கேட்ட பின்பே நாங்கள் பேனர் அடிப்பதற்கான ஆர்டரை பெறுவோம் என்று உறுதியளித்தார்.
டிஜிட்டல் பேனர்கள் தயாரிப்பது குற்றமல்ல. சட்டவிரோதமாக வைப்பது தான் குற்றம் என்று தெரிவித்த நீதிபதிகள், டிஜிட்டல் பேனர் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!