Tamilnadu

“அரசு மருத்துவமனை அலட்சியம்” மனிதாபிமானமற்ற மருத்துவர்கள்: கண்ணில் எறும்பு கடித்து பச்சிளம் குழந்தை பலி!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியாது என மருத்துவர்கள் கெடுபிடி காட்டியதால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சங்கராபுரம் அருகே கடுவனூரை சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மனைவி அலமேலு. கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 18-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 9 மாதத்திலேயே பிறந்ததால் குழந்தைக்கு முச்சுதிணறல் ஏற்பட்டது.

இதையடுத்து சிகிச்சைக்காக குழந்தையை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு குழந்தையை டாக்டர்கள், இன்குபேட்டர் கருவியில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சையின் போது குழந்தையின் கண்ணில் எறும்பு கடித்துள்ளது. அதனால் கண்ணில் பெரிதாக காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்ட வாசு, அரசு மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியத்தினால்தான் குழந்தைக்கு எறும்பு கடித்தது என்று ஆத்திரத்தில் மருத்துவரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் மருத்துவர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

இதனால் மருத்துவமனை ஊழியர்களுக்கும், வாசுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த வாசு அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வாசு, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை சரியாக கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த போலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வைத்தனர். மேலும் மருத்துவர்கள் குழந்தைக்கு இனி இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கமுடியாது, வேறு எங்கு வேண்டுமானலும் சிகிச்சை அளித்துக்கொள்ளுங்கள் என்று கெடுபிடி காட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று கூறிவிட்டு மருத்துவர் அங்கிருந்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். வழியால் கதறி அழுத குழந்தை ஒருகட்டத்தில் மயங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் தன் குழந்தை உயிரிழந்ததாகவும், மருத்துவர்களை குறை கூறினால், உடனே வெளியேற்றிவிட்டதாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.