Tamilnadu
“வைகைக் கரை வரலாறு பதியட்டும்” : கீழடி தொல்லியல் ஆய்வுகளை தொடர மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்!
மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கீழடி அகழாய்வின் நான்காம் கட்ட ஆய்வறிக்கையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “வைகைக் கரையில், கீழடியில் நடைபெற்று வருகின்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள், கருவிகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றி வருகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க இலக்கியங்களில், மதுரை நகரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. பல நாடுகளின் தூதர்கள் பாண்டிய மன்னனின் அவையில் வீற்று இருந்தது வரலாறு.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரையில் வைகை ஆற்றில் சிறுவர்கள் பழங்கால ரோமாபுரி நாணயங்களைச் சேகரித்து பழம் பொருட்கள் கடையில் விற்பனை செய்து வந்த தகவல்களை பல எழுத்தாளர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
அதன் தொடர்ச்சிதான் கீழடி ஆய்வு. அங்கே கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பொருட்கள், அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.
ஆனால் தமிழகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்தே வருகின்றது. அதற்காகத் தமிழகம் போராட வேண்டியதிருக்கின்றது. உரிய நிதி வழங்குவது இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை. கீழடி ஆய்வுகள் குறித்து மார்ச் 2017 அன்று அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளேன்.
பள்ளிப் பாடங்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் அசோகர், அக்பர் என வட இந்திய வரலாறையே முதன்மையாகக் கற்பித்து வருகின்றார்கள். பண்டித நேருவால் போற்றப்பட்ட தமிழக வரலாறை, சேர சோழ பாண்டியர்களைப் புறக்கணித்து வருகின்றார்கள். இந்த நிலை இனியும் தொடரக்கூடாது.
காவிரி, வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப் படுத்துகின்ற வகையில் தமிழக அரசின் வரலாற்றுப் பாடத்திட்டங்களை மாற்றி எழுத வேண்டும். உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் தொல்லியல்துறைக்குப் பொறுப்பு ஏற்ற பின்னர் மேற்கொண்டு வருகின்ற பணிகளையும், கீழடி ஆய்வுகளுக்கு தூண்டுகோலாக இயங்கி வருகின்ற தோழர் வெங்கடேசனையும் பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளுக்காக மேலும் பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கின்றது. கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கின்ற காவிரிபூம்பட்டினம் உள்ளிட்ட விரிவான ஆய்வுகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கம் அளித்திட வேண்டும்’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!