Tamilnadu

பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கு... ஜெயகோபால் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?

கடந்த செப்டம்பர் 12ம் தேதி பள்ளிக்கரணை பகுதியில் அ.தி.மு.கவினரால் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். விபத்திற்கு காரணமான பேனர் அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் இல்ல நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் ஜெயகோபால் கைது செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சட்டவிரோத பேனர் விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பைத் தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பேனர் வைக்கமாட்டோம் என உறுதியெடுத்துள்ளன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சுபஸ்ரீ இல்லத்துக்கு நேரில் சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே, சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு காரணமான நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

விபத்திற்கு காரணமான ஜெயகோபாலை காவல்துறை தொடர்ந்து காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து நடைபெற்று ஒரு வாரகாலம் ஆகியும் காவல்துறை அவரைக் கைது செய்யவில்லை.

ஜெயகோபால் மீதும் போலிஸார் வழக்குப் பதிவு செய்த பின்னர், ஜெயகோபால் பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று அனுமதிக்கப்பட்டிருந்தார். போலிஸார் விசாரணைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது ஜெயகோபால் அங்கு இல்லை.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ஜெயகோபால் தலைமறைவாகி உள்ளதாகவும் ஜெயகோபால் எங்கிருக்கிறார் என்பது காவல்துறையினருக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், முன்பு சொன்னதுபோல, அந்தத் திருமண நிகழ்வில் ஓ.பி.எஸ் கலந்துகொண்டதாலேயே காவல்துறையினர் ஜெயகோபால் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.