Tamilnadu
நிதி ஒதுக்கியும் பணிகளை தொடங்காத அ.தி.மு.க அரசுக்கு உலக வங்கி குழுவினர் கண்டனம் - திணறிய அதிகாரிகள்!
தமிழகத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் பாசன உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உலக வங்கியில் கடன் பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக சுமார் 2 ஆயிரத்து 962 கோடி செலவில் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டுகள் 4 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
இந்தப் பணிகள் மூலம் 4,778 ஏரிகளும், 477 அணைகளும் புனரமைக்கப்பட்டு தடுப்பனை, பாசன வாய்க்கால்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்காக முதல் கட்ட நிதியாக ரூபாய் 743 கோடி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகையில் 1,325 ஏரிகள், 107 அணைக்கட்டுகள், 45 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், இந்தப் பணிகளை அ.தி.மு.க அரசு மிகுந்த மெத்தனத்துடன் தாமதப்படுத்தி வருகிறது. பல இடங்களில் தூர்வாரப்படாத ஏரி குளங்களை பொதுமக்களே தூர்வாருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு நீர்வள நிலவள திட்டத்தின் என்ன பணிகள் மேற்கொண்டு வருகின்றது என்பது குறித்து ஆய்வு செய்ய உலக வங்கி அதிகாரிகள் குழு தமிழகம் வந்தது.
இந்தக் குழுவின் தலைமை அதிகாரியாக குமுதினி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 20-ம் தேதி வரை இந்தக் குழுவினர் தமிழகத்தில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இந்தக் குழு நீர்வள, நிலவள திட்ட இயக்குனர், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் போன்ற முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
நடைபெற்ற பணிகளைக் கேட்டறிந்த ஆய்வுக் குழு, அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். முதற்கட்டப் பணிகளில் முடிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, இரண்டாவது கட்டப் பணிக்கு உலக வங்கி ஒப்புதல் கொடுத்தும் தொடங்குவதில் தாமதம் ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பின்னர், தற்போது நடந்து வரும் பணிகள் முழுமையாக முடிந்தால் மட்டுமே அடுத்த நிதி ஒதுக்கீடு தரப்படும் எனவும் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஆய்வுக்கு வருவோம் என்றும் அதிகாரிகளிடம் உலக வங்கி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க அரசின் மெத்தன நடவடிக்கைக்கு உலக வங்கி அதிருப்தி தெரிவித்திருப்பது தமிழகத்திற்கு பெரும் சங்கடமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!