Tamilnadu

டாக்டர் எனக்கூறி இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்: குடிபோதையில் உளறிக்கொட்டி மாட்டிவிட்ட உறவினர்!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். சொகுசு காரில் கார்த்திக், பந்தாவாக வீட்டுக்கு வருவார். அவரது காரில் அரசு மருத்துவர் என்று எழுதப்பட்டிருக்கும். இவர் தன்னை ஓர் அரசு மருத்துவர் போல அப்பகுதியில் காட்டிக் கொண்டுள்ளார். அதை வைத்து அப்பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டுப் பெண்ணை கார்த்திக்கிற்கு மணம் முடித்துக் கொடுக்க முடிவு செய்தனர்.

இதுகுறித்து கார்த்திக்கிடம் பெண் வீட்டார் விசாரித்துள்ளனர். அப்போது, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். மேலும், பெண் வீட்டார் கார்த்திக் பணியாற்றுவதாக கூறிய மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததில் அங்கு கார்த்திக் என்ற பெயரில் ஒருவர் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் பெண் வீட்டார் கார்த்திக்கிற்கு தங்கள் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திக்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் கோவிலில் திருமணம் நடைபெற்றது. வியாழக்கிழமை அன்று ரெட்டேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது குடிபோதையில் வந்த கார்த்திக்கின் மாமா, பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், கார்த்திக் நீங்கள் நினைப்பது போல அரசு மருத்துவர் இல்லை எனவும் உண்மையை உளறியுள்ளார். இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரனான தகவல்களைக் கூறியுள்ளார்.

கார்த்திக் அரசு மருத்துவர் இல்லை என தெரிந்ததும் பெண் வீட்டார் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து மாதவரம் போலிஸாரிடம் பெண் வீட்டார் புகாரளித்தனர். கார்த்திக்கை கைது செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவரது சொந்த ஊர் கோவை என்பதையும் பொய் சொல்லி திருமணம் செய்ததையும் கார்த்திக் ஒப்புக் கொண்டார்.மேலும் உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு திருமணத்திற்கு வந்த பெரும்பாலானோர் போலிகள் என்பதும் தெரியவந்தது. மேலும் வேறு யாரையேனும் கார்த்திக் ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.