Tamilnadu

வெளிநாடு செல்வதற்குப் பணம் பெற கடத்தல் நாடகம் : குடும்பத்தினரையே மிரட்டிய காதல் ஜோடி கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தெலங்கானா மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் விக்னேஷ் சாஃப்ட்வேர் என்ஜினீயராகவும், மகள் வித்யா தனியார் மருத்துவமனையில் நர்ஸாகவும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் வித்யா தனது தோழியின் அக்கா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 6ம் தேதி  திருநள்ளாறு சென்றார். பின்னர் பேருந்து மூலம் சென்னைக்கு வந்துகொண்டு இருப்பதாக கூறிய வித்யா சென்னை வரவில்லை. வித்யாவை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வித்யாவை கடத்தி வைத்து இருப்பதாகவும் அவளை விடுவிக்க ரூபாய் 10 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு அவரது தந்தை ஆறுமுகம் மற்றும் அண்ணன் விக்னேஷ் ஆகியோருக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விக்னேஷ் கோயம்பேடு பேருந்து நிலைய போலிஸாரிடம் புகார் அளித்தார்.

கோயம்பேடு காவல்துறையினர் மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில் செல்போனில் பணம் கேட்டு மிரட்டிய நபர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்கிற சுரேஷ்பாபு என்பது தெரியவந்தது. அவரை கடலூரில் வைத்து தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.

மனோஜிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், “வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தில் ஏஜென்டாக வேலைபார்த்து வருகிறேன். தோழி ஒருவர் மூலமாக வித்யா எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருகிறோம். கனடா சென்று வேலைபார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். அதற்கு ரூபாய் 10 லட்சம் பணம் தேவைப்பட்டது.

அப்போது வித்யாவின் தந்தை ஆறுமுகத்திடம் நிறைய பணம் உள்ளதாகவும் அவர் பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்றும் கூறினார். எனவே, வித்யாவின் தோழி, கல்லூரி மாணவி அக்சயா ஆகியோருடன் சேர்ந்து கடத்தல் நாடகத்திற்கு திட்டம் போட்டேன்.

அதன்படி கடந்த 13ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த நான் திருமண நிகழ்ச்சி முடிந்து கோயம்பேடுக்கு பேருந்தில் வந்து இறங்கிய வித்யாவை விமான நிலையம் வரவழைத்து அவரை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்று இருவரும் லாட்ஜில் தங்கினோம்.

அங்கிருந்து வித்யாவின் தந்தை ஆறுமுகம் மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் ஆகியோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டினேன். ஆனால் திடீரென போலிஸார் என்னைத் தொடர்பு கொண்டபோது கடலூரில் இருப்பதாகவும் வித்யாவை பார்க்கவில்லை என்றும் போலிஸாரிடம் பொய் சொன்னேன்.

பின்னர் காரைக்காலில் உள்ள அக்சயா வீட்டிற்கு வித்யாவை அனுப்பிவிட்டு நான் கடலூர் வந்தபோது போலிஸார் என்னை சுற்றிவளைத்து கைது செய்தனர்” என்று கூறியுள்ளார்.

மனோஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வித்யா மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அக்சயா ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.