Tamilnadu

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் போலிஸ் : சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

சென்னை சூளைமேடு சௌராஷ்ட்ரா தெருவைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண் பானுமதி. இவருக்கு கடந்த 13-ம் தேதி அதிகாலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பானுமதியின் கணவர் வசந்தகுமார் பானுமதியையும், அவர்களது பாட்டியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சூளைமேடு ஹைரோடு சிக்னல் பகுதிக்கு வந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்த வழியில் வாகனம் எதுவும் வராத நிலையில், வலி தாங்காமல் துடித்த பானுமதியை அதே இடத்தில் பத்திரமாக நிற்க வைத்துவிட்டு வாகனம் பிடிக்க மெயின் ரோட்டுக்கு சென்றிருந்தார் வசந்தகுமார்.

ஆனால் பிரசவ வலி தாங்காமல் பானுமதி துடித்துள்ளார். பாட்டியும் செய்வதறியாமல் தவித்துள்ளார். அப்போது அந்த வழியாக காவல் ஆய்வாளர் சித்ரா ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வலியால் துடித்த பெண்ணைப்பார்த்து அதிர்ந்து போன சித்ரா அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தார்.

ஆனால், வலியால் துடித்த பெண்ணின் நிலைமை மிகவும் மோசமானதால் வாகனத்தில் ஏற்றிச்சென்றாலும், ஆபத்து என்பதால் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முடிவு எடுத்தார்.

அவருக்கு வாகன ஓட்டுனர் பத்மாவும், பாட்டியும் உதவி செய்துள்ளனர். சாலையிலேயே பானுமதிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அடுத்த 10 நிமிடத்தில் பானுமதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பானுமதியையும் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் போலிஸ் அதிகாரி சித்ரா.

போலிஸ் அதிகாரியின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. மேலும் சித்ராவையும், ஓட்டுநர் பத்மாவையும் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ்களும் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாகக் கூறியுள்ள ஆய்வாளர் சித்ரா, “இதுபோல பாராட்டுகள் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கவில்லை. ஆண்குழந்தை பிறந்த உடனே தொப்புள் கொடியை அறுப்பதற்கு எங்களிடம் ஒரு ஆயுதம் கூட இல்லை. பிறகு கயிற்றினால் தான் தொப்புள் கொடியை அறுத்தோம்.

என்னுடன் உதவி செய்த பத்மா அவருக்கு தெரிந்த ஒருவரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். பிறகு இந்த விஷயம் பரவி விட்டது. இதற்கு முன்பு பிரசவம் பார்த்த அனுபவம் இல்லை. உயிரைக் காப்பற்றவேண்டும் என்ற எண்ணத்தில் செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.