முத்தரசன்
Tamilnadu

“பேனர் கலாச்சாரத்தில் வெளிநாடு செல்ல இருந்த ஒரே மகளை அந்த குடும்பம் இழந்துள்ளது” - முத்தரசன் வேதனை!

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் வீட்டு திருமணத்திற்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதனால் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. அதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதிமன்றம் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசியல் கட்சிகள், அமைப்புகளை சார்ந்தவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சாலைகளை மறித்து பெரும் பெரும் பேனர்களை வைப்பதன் மூலம் இத்தகைய துயரச் சம்பவங்கள் தொடர்கின்றன.

நீதிமன்றம் தொடர்ந்து எச்சரித்தும் கூட அவைகள் மதிக்கப்படாத நிலை தொடர்கின்றது. அதிகாரிகள் - காவல்துறையினரின் பாரபட்சமான நடவடிக்கைகள் தான் இத்தகைய துயரச் சம்பவங்களுக்கு காரணமாகும். அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களைக் கண்டு அதிகாரிகளும், காவல்துறையினரும் அஞ்சி நடுங்கி, தங்களின் கடமைகளை செய்ய தவறுகின்றனர்.

பேனர்கள், கொடிகள் அமைப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த போதும் அவைகளை செயல்படுத்துவது இல்லை. இத்தகைய காரணங்கள் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிக்கப்படுகின்றன.சுபஸ்ரீயின் தந்தை ரவி அவர்கள் கூறும்போது, பேனர் கலாச்சாரத்தில் வெளிநாடு செல்ல இருந்த எனது ஒரே மகளை இழந்து விட்டேன்.

எனக்கு ஏற்பட்ட இத்துயரம் வேறு எவரது குடும்பத்திற்கும் ஏற்படக் கூடாது என கண்ணீர் மல்க கூறியுள்ளார். சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அவரது இழப்பிற்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்'' என அதில் தெரிவித்துள்ளார்.