Tamilnadu

செப்டம்பர் 9ம் தேதி முதல் இடி, காற்றுடன் அடித்து நொறுக்கப்போகும் கனமழை : வெதர்மேன் கணிப்பு!

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வரும் 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வடமாநிலங்களிலும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக கனமழை பெய்தது.

இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை குறித்தும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறித்தும் பதிவிட்டுள்ளார் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் பிரதீப் ஜான்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தென்மேற்குப் பருவமழையால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும்.

செப்டம்பர் 9ம் தேதி முதல் வெப்பச் சலன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வடதமிழகப் பகுதிகள், மத்திய தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் காற்றுடனும் இடியுடனும் பலத்த மழை பெய்யக்கூடும்.” எனத் தெரிவித்துள்ளார்.